தற்போதைய வாழ்க்கை செலவு மற்றும் கோவிட் -19 உடன் தொடர்புடைய சிரமங்களை கருத்தில் கொண்டு, அத்தியாவசிய பொருட்களான பருப்பு, பெரியளவிலான ரின் மீன், பெரிய வெங்காயம் மற்றும் சீனி ஆகியவற்றின் இறக்குமதி வரிகளை இன்று நள்ளிரவு முதல் அரசு நீக்கியுள்ளது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இறக்குமதித் தீர்வை நீக்கப்பட்டதால் பெரியளவான ரின் மீன் ஒன்று 200 ரூபாய், பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராம் 100 ரூபாய், சீனி ஒரு கிலோ கிராம் 85 ரூபாய் என பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவில் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அத்தியாவசிய பொருட்கள் உட்பட 500 ரூபாவுக்கு மேல் பெறுமதியான பொருட்களை சதொச நிறுவனத்தில் கொள்வனவு செய்யும் போது ஒரு கிலோ பருப்பை 150 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தெங்கு அபிவிருத்தி சபை, குருணாகல் பெருந்தோட்ட கம்பனி மற்றும் சிலாபம் பெருந்தோட்ட கம்பனி என்பன கொழும்பு நகரத்திற்கான தேங்காய் வழங்களை அதிகரித்துள்ளன. எனவே நுகர்வோருக்கு சதோச விற்பனை நிலையங்களில் நியாயமான விலைக்கு தேங்காய்களை கொள்வனவு செய்யும் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
