நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக அதிகரித்துள்ளது.
மினுவாங்கொட – பேலியகொட கோரோனா பரவல் கொத்தணியை அடுத்து கடந்த 5 வாரத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் கடந்த ஜனவரி முதல் 14 ஆயிரத்து 285 பேர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 9 ஆயிரத்து 537 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர். 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
ராஜகிரியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வயோதிபர்கள் இல்லத்தில் வசிக்கும் 51 வயதுடைய ஆண் ஒருவர் கடந்த சனிக்கிழமை (07) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இறப்புக்கான காரணம் கோவிட்-9 மற்றும் நிமோனியா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வயோதிபர் இல்லத்திலிருந்து அறியப்பட்ட முதல் உயிரிழப்பாகும். பல நாடுகளில் கோரோனா வைரஸ் குறிப்பாக வயோதிபர் இல்லங்களின் பராமரிக்கப்படுபவர்களை மோசமாக பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.
இரண்டாவது உயிரிழந்தவர் கொழும்பு -10 ஐச் சேர்ந்த 45 வயதுடைய ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ஒக்டோபர் 23 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு கோரோனா வைரஸை தொற்றுக்கு முன்பாக காணப்பட்ட நோயே உயிரிழப்புக் காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 9ஆம் திகதி நேற்று கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த உதுகம்போலவில் வசிக்கும் 63 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
55-60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் இன்று உடற்கூற்றுப் பரிசோதனைக்காக இன்று ஒப்படைக்கப்பட்டது. அவருக்கு கோவிட் -19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
