Tuesday 10 November 2020

தூர இடங்களில் இருந்து வரும் யாழ். பல்கலை. உத்தியோகத்தர்களுக்கு தனியான பஸ் சேவை..!!!

SHARE

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல பகுதிகளிலிருந்தும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு வரும் உத்தியோகத்தர்களுக்குத் தனியான போக்குவரத்து சேவைகள் நாளை புதன்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளன.

பருத்தித்துறை, கொடிகாமம், தெல்லிப்பளை, வட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் இருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு இந்த சேவைகள் இடம்பெறவுள்ளன என்று பல்கலைக்கழக நிர்வாகக் கிளையின் பிரதிப் பதிவாளர் ம.கணேசலிங்கம் அறிவித்துள்ளார்.

நாட்டில் எழுந்துள்ள கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தை அடுத்து, உத்தியோகத்தர்களுக்கு பொதுப் போக்குவரத்தைத் தவிர்க்கும் வகையில் இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கிளிநொச்சி வளாகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு வவுனியாவில் இருந்தும், யாழ்ப்பாணத்தில் இருந்தும் இம்மாத முற்பகுதியில் தனியான பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தினுள் பருத்தித்துறை – யாழ்ப்பாணம் மார்க்கத்தில் அச்சுவேலி, இராச வீதி, கோப்பாய் வழியாக வரும் பேருந்து புலோலி சந்தியில் இருந்தும், ஏ-9 மார்கத்தில் வரும் பேருந்து கொடிகாமத்திலிருந்தும், காரைநகர் மார்க்கத்தில் வரும் பேருந்து வட்டுக்கோட்டை சந்தியில் இருந்தும் தினமும் காலை 7 மணிக்குப் புறப்படுவதுடன்,

மாலையில் பிற்பகல் 4.15 மணிக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து திரும்புவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
SHARE