Wednesday 11 November 2020

வீடமைப்பு எந்த நகரங்களில் அமுல்படுத்தப்படுகின்றது – அரசாங்கம் வெளியிட்ட தகவல்..!!!

SHARE


நாட்டின் பல்வேறு பகுதிகளை உள்ளடக்கிய விதத்தில் ஒரே நேரத்தில் பல்வேறு வீடமைப்பு திட்டங்களை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

நிர்மாணத்துறை முன்னோடிகளை சந்தித்து இன்று கலந்துரையாடல்களை நடத்திய போதே ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஆக்கத்திறனுடன், சுற்றாடலை பாதுகாத்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

எதிர்வரும் 3 வருடங்களில் மத்திய தரப்பினருக்காக நிர்மாணிக்க எதிர்பார்க்கப்படும் வீடுகளின் எண்ணிக்கை 15000 என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், குறைந்த மற்றும் உயர் வருமானங்களை பெற்றுக்கொள்வோருக்காக எதிர்வரும் 4 வருடங்களில் 36884 வீடுகளை நிர்மாணிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இதன்படி, பேலியகொட, கொலன்னாவ, புளுமெண்டல், கொட்டாவ – மாகும்புர, கொட்டாவ – பலதுருவத்த, பொரலஸ்கமுவ, மாலபே, கண்டி – கெட்டம்பே மற்றும் அநுராதபுரம் ஆகிய நகரங்களை மையப்படுத்தியே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

நிறைவேற்று, தொழில்முயற்சி மற்றும் அனைத்து துறைகளிலும் உள்ள பெருமளவு இளைஞர்களின் வீட்டுக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு அதன் மூலம் எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அதற்காக 30 வருடங்களில் செலுத்தி முடிக்கக்கூடிய வகையில் இலகு வட்டி வீதத்தில் கடன் வழங்க வர்த்தக வங்கிகளின் பங்களிப்பு பெற்றுக்கொள்ளப்படும்.

நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதுடன் அதற்கு தேவையான பொருட்களை வழங்குவதன் மூலம் பல தொழில் வாய்ப்புகள் உருவாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கொவிட் நோய்த்தொற்றுக்கு வெற்றிகரமாக முகம்கொடுத்து தொடர்ந்தும் அனைத்து செயற்பாடுகளையும் அதிகபட்சமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அனைத்து தொழிற் பிரதேசங்களும் சுகாதார பரிந்துரைகளை பின்பற்றி செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இந்த திட்டங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கும் சக்தியாக அமையும் என தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா ஆகியோரும் நகர அபிவிருத்தி வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் நிர்மாணத் துறை நிறுவனங்களின் அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

SHARE