புரேவி புயல் தாக்கத்தின் விளைவாக வல்வெட்டித்துறையில் வீடுகள் சிலவற்றின் கூரைகள் தகர்ந்ததால் 2 சிறுவர்கள் உள்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர். 37 குடும்பங்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காக மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வல்வெட்டித்துறை ஆதிகோயிலடியில் இன்றிரவு 8.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
சம்பவம் இரத்தினசாமி சாந்தரூபான் (வயது-30) என்பவர் காயமடைந்து பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். பீற்றர் மகிந்தன் (வயது -35) என்பவர் ஊரணி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சிறுவர்கள் இருவரும் ஊரணி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர்.
பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் வல்வெட்டித்துறை, பருத்தித்துறை நகர், புலோலி ஆகியவற்றில் 58 குடும்பங்களைச் சேர்ந்த 206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் வல்வெட்டித்துறையில் 37 குடும்பங்கள் பாதுகாப்பான இடத்துக்கு இடம்பெயர்ந்துள்ளனர் என்று பருத்தித்துறை பிரதேச செயலர் தெரிவித்தார்.