யாழ். மடம் வீதியில் உள்ள தேவரிக்குளம் மூடப்பட்டு அதை ஒரு பூங்கா போன்று அமைக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ். மாநகர சபையின் ஏற்பாட்டில் இச்செயற்பாடு இடம்பெறுவதாகவும் தெரியவருகின்றது.
இவ்விடயம் தொடர்பாக அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் கேட்டபோது, 'குளத்தை மண் மற்றும் கட்டிட இடிபாடுகளைக் கொட்டி மூடிவிட்டு நடுவே கேணி போன்ற ஒரு தோற்றத்துடன் நடைப்பயிற்சிக்குரிய பூங்காவாக மாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன' எனத் தெரிவித்தனர்.
இதேவேளை, யாழ். மாநகர சபையின் உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் சிலரும் அண்மைக் காலங்களில் அப்பகுதிக்கு வந்து மேற்பார்வையிட்டுச் சென்றுள்ளனர் எனவும் மக்களின் வாயிலாக அறிய முடிகின்றது.
யாழ்ப்பாணத்தில் உள்ள குளங்கள் மூடப்பட்டு கட்டிடங்கள் அமைக்கப்பட்டமையால் மழை வெள்ளம் யாழ்.நகரை ஆக்கிரமித்துள்ள நிலையில் இருக்கின்ற குளங்கள், கேணிகளை காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு யாழ்ப்பாண மக்களுக்கு மாத்திரமின்றி சமூக ஆர்வலர்கள் அதிகாரிகள் அனைவருக்கும் உள்ளது.
எனவே, மேற்படி தேவரிக்குளம் விவகாரம் தொடர்பாக யாழ். மாநகர சபை யின் அனுமதியின்றி செயற்படுத்த முடியாத நிலையில் முதல்வர் உடனடியாக பதில் அளிக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படங்கள் :- யாழ்.தர்மினி



