திருகோணமலைக்கு கிழக்கே தென்- கிழக்காக தற்போது 200 மீற்றருக்கு அப்பால் காணப்படும் புரவி எனும் சூறாவளியானது இன்று இரவு 7 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப் பகுதியில் திருகோணமலைக்கும், பருத்தித்துறைக்கும் இடையில் முல்லைத்தீவுக்கு அண்மித்துத் தரையை ஊடறுத்துச் செல்லக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இதன்காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய,மாகாணங்களில் தொடர்ச்சியான மழைவீழ்ச்சியும், காற்றின் வேகமானது 75 தொடக்கம் 85 கிலோமீற்றர் அதிகரித்தும் வீசக் கூடும். இந்தக் காற்றின் வேகமானது சில வேளைகளில் 95 கிலோமீற்றர் வேகம் வரை அதிகரித்தும் வீசக் கூடும் எனத் திருநெல்வேலி வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி ரி. பிரதீபன் தெரிவித்துள்ளார்.
புரவி சூறாவளி நிலவரம் தொடர்பில் இன்று புதன்கிழமை(02) மாலை கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தச் சூறாவளியானது மன்னார் கடல் ஊடாக ஊடறுத்து இந்தியாவின் தமிழ்நாட்டை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த சூறாவளித் தாக்கம் காரணமாக புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாகப் பொத்துவில் வரையான கடற்பரப்புக்களில் காற்றின் வேகம் மணிக்கு 80 தொடக்கம் 100 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசும். இந்தக் காற்றின் வேகம் இடையிடையே 120 கிலோமீற்றர் வரையும் வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதால் இந்தக் கடற்பரப்புக்கள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்.
எனவே, கடற்தொழிலாளர்கள் உந்த விடயம் தொடர்பாக அவதானத்துடன் செயற்பட்டுக் கடற்தொழிலைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துகின்றோம்.
இதுமாத்திரமன்றி இடி, மின்னல் தாக்கங்கள் ஏற்படும் வேளைகளில் இதனால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைக்கும் வகையில் பொதுமக்கள் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றோம்.
அதேவேளை, தற்காலிக கூரைகள் மற்றும் காற்றினால் பாதிக்கப்படக் கூடிய இடங்கள் தொடர்பில் அவதானம் செலுத்திப் பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறும் கேட்டுக் கொள்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Tags:
sri lanka news
