புரேவிப் புயல் காரணமாக பொன்னாலைக் கடலில் உயிரிழந்த சுழிபுரம் பெரியபுலோவைச் சேர்ந்த செல்வராசா செல்வக்குமார் என்பவரின் குடும்பத்திற்கு எனப் புலம்பெயர் உறவுகள் வழங்கிய 85 ஆயிரம் ரூபா நிதி உயிரிழந்தவரின் குடும்பத்தவர்களிடம் இன்று திங்கட்கிழமை(05) மதியம் கையளிக்கப்பட்டது.
வலி.மேற்குப் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி பொ.பிறேமினி குறித்த நிதியைப் பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் கையளித்தார்.
மேற்படி குடும்பத்தின் கஷ்ட நிலை தொடர்பாக சமூக செயற்பாட்டாளர் பிருந்தாபன் பொன்ராசா முகப் புத்தகத்தில் தரவேற்றிய பதிவைப் பார்வையிட்ட புலம்பெயர் தேசத்து உறவுகள் அவர்களுக்கு காணி வாங்குவதற்கு நிதி உதவி செய்வதற்கு முன்வந்தனர்.
இவர்களில் கனடாவில் வசிக்கும் பொன்னாலையைச் சேர்ந்த நரசிங்கம் குடும்பத்தினர் 25 ஆயிரம் ரூபா நிதி வழங்கி இத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர். தொடர்ந்து பிரான்ஸில் வசிக்கும் ஆர்.கே.எஸ். அருள்மொழித் தேவனின் ஒழுங்குபடுத்தலில் கிளிநொச்சி ஜெயந்தி நகரைச் சேர்ந்த தற்போது பிரான்ஸில் வசிக்கும் திரு.திருமதி உமாகாந் நிரஞ்சினி 25 ஆயிரம் ரூபா, லண்டனில் வசிக்கும் கோபாலகிருஷ்ணன் கிருஷ்ணகுமார் 25 ஆயிரம் ரூபா, புங்குடுதீவு 5 ஆம் வட்டாரம் பிள்ளைநாயகம் ரேணுகா குடும்பம் 10 ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் உடனடியாகவே நிதி வழங்கியிருந்தனர்.
முகப் புத்தகப் பதிவின் அடிப்படையில் விசேட ஏற்பாடுகளின் கீழ் அவர்களுக்கு அரச வீட்டுத்திட்டம் கிடைக்கப் பெற்றது. எனினும், மேற்படி குடும்பத்தினர் காணியை அடையாளப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால், இவர்கள் ஏற்கனவே குடியிருந்த உயிரிழந்தவரின் சகோதரியின் காணி பாதிக்கப்பட்ட குடும்பத்தின் பெயரில் மாற்றப்பட்டு வீடு கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
மேற்படி புலம்பெயர் உறவுகள் வழங்கிய 85 ஆயிரம் ரூபா நிதி வீட்டைக் கட்டி முடிப்பதற்குரிய உதவியாக குறித்த குடும்பத்திடம் வழங்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் சமூகச் செயற்பாட்டாளர் ந.பொன்ராசா, சுழிபுரம் மேற்கு கிராம சேவையாளர் எஸ்.ஜீவராசா, பொன்னாலை ஸ்ரீ கண்ணன் சனசமூக நிலையத் தலைவர் செ.றதீஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, பாதிப்பினை எதிர்கொண்டுள்ள மேற்படி குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கிய புலம்பெயர் உறவுகளுக்கு சமூக செயற்பாட்டாளர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.