புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் கடந்த 12ஆம் திகதி கொவிட்-19 நோய்த்தொற்றாளர்கள் 5 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் தொழிற்சாலையை மூட சுகாதார மருத்துவ அதிகாரி அறிவுறுத்தல் வழங்கிய போதும் நிர்வாகம் அதனை உதாசீனம் செய்துள்ளது.
உள்ளூர் சுகாதாரத் துறையினால் வழங்கப்படும் அறிவுத்தலை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் கொழும்பிலிருந்து அறிவுறுத்தல் கிடைத்தால் ஆடைத் தொழிற்சாலையை மூடுவதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 12ஆம் திகதி தொடக்கம் இன்று 17ஆம் திகதிவரை 6 நாள்களில் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் 215 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் கடந்த 12ஆம் எழுமாற்றாக 50 பணியாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 5 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.
அதனையடுத்து ஆடைத் தொழிற்சாலைக்கு சீல் வைக்க புதுக்குடியிருப்பு சுகாதார மருத்துவ அதிகாரி நடவடிக்கை எடுத்த போதும் அதற்கு ஆடைத் தொழிற்சாலை நிர்வாகம் இடமளிக்கவில்லை. தமக்கு கொழும்பு சுகாதார அமைச்சிலிருந்து உத்தியோகபூர்வ அறிவுறுத்தல் கிடைக்கும் வரை ஆடைத் தொழிற்சாலையை மூட முடியாது என்று நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் தொற்று நிலமை தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு அறிவிக்கப்பட்ட நிலையிலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தற்போது 6 நாள்களில் 215 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல இடங்களையும் சேர்ந்தவர்கள், கிளிநொச்சி, வவுனியா, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் வீடு திரும்பியுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தடுக்க நடவடிக்கை எடுத்த பொலிஸார் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய ஆடைத் தொழிற்சாலை மீதும் நடவடிக்கை எடுப்பார்களா? என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்
Tags:
sri lanka news