நாட்டில் இன்றும் (08.05.2021) நாளையும் தென்மேற்கு பருவ பெயர்ச்சி காலநிலை காரணமாக மழை வீழ்ச்சி அதிகரிக்கக் கூடும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இந்நிலையில் கடந்த 3 ஆம் திகதி முதல் இன்று காலை வரையான 5 நாட்களில் சீரற்ற காலநிலை காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு ஒருவர் காணாமல் போயுள்ளதோடு ஐவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, புத்தளம், களுத்துறை, நுவரெலியா, கேகாலை, கண்டி, குருணாகல் மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் இதுவரையில் 52,695 குடும்பங்களைச் சேர்ந்த 2,07,882 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு 20 வீடுகள் முழுமையாகவும் 1,039 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
மேலும் 5,360 குடும்பங்களைச் சேர்ந்த 23,164 நபர்கள் தற்காலிக முகாம்களிலும் , 5,899 குடும்பங்களைச் சேர்ந்த 23,640 நபர்கள் உறவினர்களது வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
காலநிலை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி , மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடை மழை பெய்யக் கூடும். மன்னார் மாவட்டத்திலும் சில சந்தர்ப்பங்களில் மழை பெய்யக் கூடும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில பிரதேசங்களில் மாத்திரம் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும். வடமேல் மாகாணத்திலும் , கொழும்பு, கம்பஹா, கேகாலை, நுவரெலியா மற்றும் கண் ஆகிய மாவட்டங்களில் சில பிரதேசங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும்.
மத்திய மலைப்பிரதேங்களின் மேற்கு சரிவு பகுதிகளிலும் , வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோ மீற்றராகக் காணப்படும்.
கடற்பிரதேசங்கள்
மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பிரதேசத்தில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். ஏனைய கடற்பிரதேசங்களில் ஓரளவு மழை பெய்யக் கூடும்.
நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் காற்றானது மேற்கு திசையிலிருந்து தென்மேற்கு திசைநோக்கி வீசும். இதன் போது காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோ மீற்றராகக் காணப்படும். அத்தோடு காலியிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையும் , புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற் பகுதிகளிலும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 - 60 கிலோ மீற்றராகக் காணப்படும்.
காலியிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புக்கள் இடைக்கிடை கொந்தழிப்பாகக் காணப்படும். நாட்டை சூழவுள்ள ஏனைய கடற்பிரதேசங்களும் சில சந்தர்ப்பங்களில் கொந்தழிப்பாகக் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது குறித்த கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் தற்காலிகமாக அதிகரிக்கக் கூடும். இதன் போது கடல் கொந்தழிப்பும் அதிகரிக்கும் என வளிமண்லவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Tags:
sri lanka news