கோண்டாவில் வாள் வெட்டில் கை துண்டாடப்பட்ட சம்பவம் - சந்தேகநபர்கள் பிணையில் விடுவிப்பு..!!!


கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட கோண்டாவிலில் இடம்பெற்ற வன்முறையில் ஒருவருக்கு கை துண்டாடப்பட்டும் மேலும் 6 பேர் படுகாயமடைந்த சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று சந்தேக நபர்கள் மூவரும் முற்படுத்தப்பட்ட போது, கோப்பாய் பொலிஸார் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்காத நிலையில் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டது.

கடந்த ஜூன் 30ஆம் திகதி கோண்டாவிலில் வீடொன்றுக்குள் புகுந்த அங்கிருந்த 7 பேரை கூடிய ஆயுதங்களினால் தாக்கி படுகாயம் விளைவித்தும் வீட்டிலிருந்த பெறுமதியான பொருள்களை தாக்கிச் சேதப்படுத்தியும் தீவைத்தும் வன்முறையில் ஈடுபட்டதாக கோப்பாய் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பி அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

சந்தேக நபர்கள் நால்வரும் கடந்த ஜூலை 5ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன் அடையாள அணிவகுப்புக்குட்படுத்த மன்று உத்தரவிட்டிருந்தது. எனினும் நாட்டில் ஏற்பட்ட கோவிட்-19 நோய்ப்பரவல் காரணமாக சந்தேக நபர்கள் நால்வரும் ஓகஸ்ட் 19ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய 3 சந்தேக நபர்கள் தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று தமது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்தனர்.

சந்தேக நபர்கள் மூவரை பிணையில் விடுவிக்க அவர்களது சட்டத்தரணி பிணை விண்ணப்பத்தை மன்றில் முன்வைத்தார்.

பிணை விண்ணப்பத்துக்கு மன்றில் தோன்றியிருந்த கோப்பாய் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

அதனால் சந்தேக நபர்கள் மூவரையும் தலா 5 லட்சம் ரூபாய் 2 ஆள் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனால் முக்கிய சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்புக்கு உள்படுத்தும் செயல்முறையும் இல்லாமல் போயுள்ளது
Previous Post Next Post


Put your ad code here