Saturday 25 September 2021

ஐந்து வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்தவருக்கு தடையுத்தரவு பெற்ற முல்லைத்தீவு பொலிஸார்..!!!

SHARE

ஐந்து வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்தவர் உள்ளிட்ட நால்வருக்கு தியாகதீபம் தீலிபனுடைய நினைவேந்தலை மேற்கொள்வதற்கு முல்லைத்தீவு நீதிமன்று ஊடாக பொலிஸார் தடையுத்தரவை பெற்றுக்கொண்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் வீட்டுக்கு சென்று தடையுத்தரவை பொலிஸார் வழங்க சென்ற போது , உயிரிழந்தவரின் மகன் , " அப்பா உயிரிழந்து 5 வருடங்கள் கடந்து விட்டன. அவருக்கான தடையுத்தரவை நான் வாங்க முடியாது, அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள முல்லைத்தீவு உண்ணாப்புலவு சேமக்காலையில் சென்று அவரது கல்லறையில் தடையுத்தரவை சமர்ப்பியுங்கள் என கூறி பொலிஸாரை திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிக்குள் தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்தவுள்ளார் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் நேற்று (24) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்கு இலக்கம் AR/724/21இல் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

அதனூடாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான , துரைராசா ரவிகரன் , எம்.கே. சிவாஜிலிங்கம் , கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் மரிய சுரேஸ் ஈஸ்வரி, ஆகியோருக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்வதற்கு தடை உத்தரவுகளை பொலிஸார் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இந் நிலையில் குறித்த தடையுத்தரவினை முல்லைத்தீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்கள் இன்று, ஐந்து வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அன்ரனி ஜெகநாதனுடைய இல்லத்துக்கு எடுத்து சென்று அவருடைய மகன் பீற்றர் இளஞ்செழியனிடம் வழங்கிய போது, இதில் தன்னுடைய பெயர் இல்லை என கூறி அப்பா உயிரிழந்து 5 வருடங்கள் கடந்து விட்டன. அவருக்கான தடையுத்தரவை நான் வாங்க முடியாது, அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள முல்லைத்தீவு உண்ணாப்புலவு சேமக்காலையில் சென்று அவரது கல்லறையில் தடையுத்தரவை சமர்ப்பியுங்கள் என பொலிஸாரை திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.
SHARE