Saturday 25 September 2021

பிரித்தானியாவில் பெட்ரோல், உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு ?

SHARE


பிரித்தானியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு குறித்து அச்சம் வேண்டாம், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்தும், மக்கள் அச்சம் காரணமாக சுயநலத்துடன் செயல்படுவதைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவில் கனரக வாகன சாரதிகள் பற்றாக்குறை காரணமாக பெட்ரோல் மற்றும் உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

சில பெட்ரோல் நிலையங்கள் வாடிக்கையாளர் ஒருவருக்கு 30 பவுண்டுகள் மதிப்பிலான பெட்ரோலை மட்டுமே வழக்குகின்றன.
ஆனால், தாங்களே பெட்ரோல் நிரப்பிக்கொள்ளும் வசதியுள்ள மற்ற இடங்களில், பலரும் கேன்களில் பெட்ரோலை நிரப்புவதை வெளியாகியுள்ள புகைப்படங்களில் காணலாம்.

அவர்கள் நீண்ட நேரமாக கேன்களில் பெட்ரோலை நிரப்ப, மற்றவர்கள் பெட்ரோல் போடும் இடத்தை நெருங்கவே மணிக்கணக்காக காத்திருக்கும் சூழல் பல இடங்களில் காணப்படுகிறது.

கனரக வாகன சாரதிகள் தட்டுப்பாட்டால், பெட்ரோல் முதல் உணவுப்பொருட்கள் வரை கொண்டு வர ட்ரக்குகள் இல்லாததால், பல பல்பொருள் அங்காடிகளில் ஷெல்ஃப்கள் காலியாக காணப்படுகின்றன, முக்கிய உப பொருட்கள் வராததால் உணவகங்களும் மதுபான விடுதிகளும் கூட பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


5,000 வெளிநாட்டு சாரதிகளுக்கு அவசரமாக விசா வழங்கும் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன்.
பிரித்தானியாவின் பல பகுதிகளில் பெட்ரோல் நிலையங்கள் முன் எரிபொருள் நிரப்ப வாகனங்கள் குவிந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பிரித்தானியாவே பரபரப்படைந்துள்ளது.

நிலைமை சீரடைய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும், பதற்றம் வேண்டாம் என்ற அரசின் கோரிக்கையை மக்கள் காதில் வாங்கியதுபோல் தெரியவில்லை. ஆகவே, பெட்ரோல் நிலையங்கள் முன் கோபத்துடன் இன்னமும் நீண்ட வரிசையில் மக்கள் தங்கள் வாகனங்களுடன் நிற்கிறார்கள்.

கடந்த கால நிகழ்வுகள் நினைவுக்கு வந்ததால், எரிபொருள் பற்றாக்குறையால் பொருளாதாரம் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்துடன் அவர்கள் பெட்ரோல் நிலையங்கள் முன் குவிந்துள்ளதால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இவை எல்லாவற்றிற்கும் காரணம், கனரக வாகன ஓட்டிகள் பற்றாக்குறை. இன்னொரு வகையில் கூறினால் பிரெக்சிட் என்றும் கூறலாம்.

பிரபலமான ஒரு கதை உண்டு. அதில் ஒருவர் மரத்தின் கிளை ஒன்றில் உட்கார்ந்துகொண்டு, தான் உட்கார்ந்திருக்கிற கிளையையே வெட்டிக்கொண்டிருப்பார். கடைசியில், அந்த கிளையுடன், அவரும் கீழே விழுவார்.

பிரெக்சிட்டும் அப்படித்தான் ஆகிவிட்டதோ என்று தோன்றுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தேவையில்லாமல் பெரும் தொகையை வழங்குகிறோம் என்று எண்ணி, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியது பிரித்தானியா. ஆனால், அதைத் தொடர்ந்து பிரித்தானியா சந்தித்துவரும் பிரச்சினைகள் ஏராளம்.

பிரித்தானிய கடல் பகுதியில் பிரான்ஸ் மீன் பிடிக்கக்கூடாது என்றது பிரித்தானியா. பதிலுக்கு உங்கள் மீனை நாங்கள் வாங்கமாட்டோம் என்றன ஐரோப்பிய ஒன்றிய நாடுகள். பிரான்சின் கலாயிஸ் துறைமுகம் வழியாக பிரித்தானியாவுக்கு உள்ளே செல்லவும், வெளியேறவும் பிரச்சினை ஏற்பட்டது. கால தாமதமானது. லொறி சாரதிகள் கடும் பிரச்சினைகளை சந்தித்தார்கள்.

கடைசியில், இந்த தொல்லை எல்லாம் எதற்கு, நம் சொந்த நாட்டுக்குத் திரும்பிவிடுவோம் என பல ஐரோப்பிய ஒன்றிய லொறி சாரதிகள் வேலையை விட்டு விட்டு போய்விட்டார்கள்.அத்துடன் கொரோனா கட்டுப்பாடுகளும் சேர்ந்துகொள்ள, அப்படி போனவர்களில் சுமார் 100,000 கனரக வாகன சாரதிகளும் அடக்கம்.

கனரக வாகனங்களை ஓட்ட சாரதிகள் இல்லாததால் உணவு முதல் எரிபொருள் வரை அத்தியாவசிய பொருட்களை பிரித்தானியாவுக்குக் கொண்டு வர வாகனங்கள் போதவில்லை.

ஆக, கொஞ்சம் கொஞ்சமாக பிரித்தானியாவில் தட்டுப்பாடு ஏற்பட ஆரம்பித்தது. இறக்குமதி செய்யப்படும் சில குறிப்பிட்ட உணவுகளில் தட்டுப்பாடு தொடங்கி, தற்போது எரிபொருள் தட்டுப்பாட்டில் வந்து நிற்கிறது.

பிரித்தானியாவில் வாழும் நடுத்தர வயதுடையோர் மற்றும் முதியவர்களுக்கு வரலாறு நன்றாக தெரியும். ஏற்கனவே இரண்டு முறை, அதாவது, 1973 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் பிரித்தானியாவில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் 1978இல் வாகன ஓட்டிகள் முதலானோர் நடத்திய வேலை நிறுத்தத்தால் ஏற்பட்ட எரிபொருள் விலையுயர்வு, உணவுப்பற்றாக்குறையை ஏற்படுத்தியதோடு, எரிபொருளை ரேஷன் முறையில் வழங்கும் ஒரு நிலையும் உருவானது. ஆகவே, அதே போன்ற ஒரு நிலைமை மீண்டும் உருவாகிவிடுமோ என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது.

இந்நிலையில், இதுவரை அகதிகளை வன்கரம் கொண்டு கட்டுப்படுத்தவேண்டும் என கடும் முயற்சிகள் மேற்கொண்ட பிரித்தானியா, இப்போது அவசர அவசரமாக வெளிநாட்டு கனரக வாகன ஓட்டிகளுக்கு தற்காலிக விசாக்கள் வழங்க திட்டமிட்டுள்ளது.

சுமார் 5,000 வெளிநாட்டு ட்ரக் சாரதிகளுக்கு தற்காலிக விசா வழங்கி, அவர்கள் உதவியுடன் இந்த தட்டுப்பாடுகளை தீர்க்க பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிடுகிறார்.

விடயம் என்னவென்றால், தற்போது பிரித்தானியாவில் சுமார் 100,000 ட்ரக் சாரதிகள் பற்றாக்குறை உள்ளது. போரிஸ் 5,000 அல்ல 10,000 விசாக்கள் வழங்கினாலும், மீதமுள்ள 90,000 வெற்றிடங்களை எப்படி நிரப்ப முடியும்?

ஆக, இராணுவ வீரர்களையும் ட்ரக் சாரதிகளாக களமிறக்கும் ஒரு திட்டமும் உள்ளது.

ஆனாலும், அதற்குள் பிரச்சினைகள் தொடங்கிவிட்டன. நேற்று பள்ளிகளுக்குச் சென்று பிள்ளைகளை அழைத்து வரச் சென்ற பெற்றோரும், முதியோரும், வர்த்தகர்களுமாக பெட்ரோலுக்காக பெட்ரோல் நிலையங்கள் முன் குவிய, சாலைகள் ஸ்தம்பித்துப்போயின.

இன்னொரு பக்கம் மக்கள் பயந்ததுபோலவே, குளிரூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் வந்து சேராததால் சில பல்பொருள் அங்காடிகளில் உணவுப் பொருள் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சமும் உருவாகியுள்ளது.அடுத்து என்னவாகும் என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

ஈழம் ரஞ்சன்











 

SHARE