1,299 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மீட்பு..!!!




கற்பிட்டி கண்டல்குளி கடற்பிரதேசத்தில் 1299 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.

வடமேற்கு கடற்படை கட்டளையின் பி 424 அதிவேக ரோந்து கப்பல் மூலம் குறித்த பகுதியில் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இதன்போது சர்வதேச கடல் எல்லையை மீறி, இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த இந்திய படகு ஒன்றினை கடற்படையினர் சோதனை செய்தனர்.

இதன்போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1299 கிலோ கிராம நிறையுடைய 52 மூடைகளில் பொதி செய்யப்பட்ட உலர்ந்த மஞ்சள் குறித்த இந்தியப்; படகில் காணப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து, 1299 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மூடைகளை கைப்பற்றிய கடற்படையினர், இந்தியப் படகினை தமது பொறுப்பில் எடுத்ததுடன், குறித்த படகில் பயணித்த 4 இந்தியர்களையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

உள்ளுர் பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லும் நோக்கில் குறித்த உலர்ந்த மஞ்சள் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட உலர்ந்த மஞ்சள் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய கொரோனா தொற்று நீக்கி தெளிக்கப்பட்டுள்ளதுடன், 1299 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மூடைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தமது பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

அத்துடன், கைது செய்யப்பட்ட 4 இந்தியர்களும், கடற்படையினரால் தமது பொறுப்பில் எடுக்கப்பட்ட இந்திய படகினையும் இலங்கையின் பிராந்திய கடல் எல்லைகளுக்கு அப்பால் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, கற்பிட்டி பிரதேசத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஒக்டோபர் 09 வரையிலான காலப்பகுதியில் 7,279 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 4 இந்தியர்கள் உட்பட 16 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Previous Post Next Post


Put your ad code here