Wednesday 20 October 2021

‛பேஸ்புக்’ பெயர் மாறுகிறது- 28ஆம் திகதி வெளியாகிறது புதிய பெயர்..!!!

SHARE

சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பேஸ்புக்கின் பெயர் மாற்றப்படவுள்ளதாக ‘தி வேர்ஜ்’ செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைத்துள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேஸ்புக் தலைமை நிர்வாக அலுவலர் மார்க் சுக்கர்பெர்க், பெயர் மாற்றுவது குறித்த முடிவை ஆண்டு தொடர்பு மாநாட்டில் தெரிவிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாநாடு ஒக்டோபர் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது.

ஊகங்கள், வதந்திகள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என பேஸ்புக் குறிப்பிட்டுள்ளது. பேஸ்புக்கின் வர்த்தக செயல்பாடுகளால் அமெரிக்க அரசு அதன் கெடுபிடிகளை அதிகரித்துள்ள நிலையில், பெயர் மாற்றுவது குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

பேஸ்புக் பெயர் மாற்றப்படும் பட்சத்தில், மற்ற சமூக வலைதளம் போல் இதுவும் தாய் நிறுவனத்தின் கீழ் செயல்படும் கிளை நிறுவனமாக மாறும். பேஸ்புக் தாய் நிறுவனத்தின் கிளை நிறுவனமாக இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஓக்குலஸ் ஆகிய நிறுவனங்கள் தற்போது இயங்கிவருன்றன.

சிலிக்கான் பள்ளத்தாக்கில் இயங்கிவரும் நிறுவனங்கள் பெயரை மாற்றிக் கொள்ளும் வழக்கம் புதிதான ஒன்றல்ல. சேவைகளை விரிவுப்படுத்த நினைக்கும் போது பெயரை மாற்றிக் கொள்ளும். தேடல் இயந்திரம் மற்றும் விளம்பர வர்த்தகத்தை தாண்டி வணிகத்தை விரிவுப்படுத்த நினைத்த கூகுள், கடந்த 2015ஆம் ஆண்டு, ஆல்பாபெட் ஐ.என்.சி என்ற தாய் நிறுவனத்தை உருவாக்கியது.

ஒட்டோமொபைல் ஆலைகள், சுகாதார தொழில்நுட்பம், தொலைதூர இடங்களில் இணைய சேவை அளிப்பது உட்பட பல்வேறு நிறுவனங்கள் ஆல்பாபெட் ஐ.என்.சி கீழ் இயங்கிவருகிறது.

மெடாவெர்ஸ் என்ற மெய்நிகர் உலகை படைப்பதில் பேஸ்புக் நிறுவனம் கவனம் செலுத்திவருகிறது. இதற்கு மத்தியில், பேஸ்புக் நிறுவனம் பெயர் மாற்றவுள்ளது.

மெய்நிகர் ரியாலிட்டி மற்றும் ஆக்மென்ட் ரியாலிட்டி ஆகியவற்றில் பேஸ்புக் அதிக முதலீடு செய்துள்ளது. கிட்டத்தட்ட மூன்று பில்லியன் பயனர்களை இந்த சாதனங்கள் மற்றும் செயலிகள் மூலம் இணைக்க பேஸ்புக் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐரோப்பிய ஒன்றியத்தில் 10,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மெய்நிகர் உலகை படைக்கும் திட்டத்தை கடந்த செவ்வாய்க்கிழமை பேஸ்புக் நிறுவனம் அறிவித்தது.
SHARE