Thursday 14 October 2021

பிக்பாஸ் 5 : 11ம் நாள் | அபிஷேக் அழுகாச்சிகள்... எல்லாமே ஜோக்கரா இருந்தா எப்படிப்பா விளையாடுறது?

SHARE

கன்ஃபெஷன் ரூமுக்குத் தாமரையை அழைத்த பிக்பாஸ் “நான் உன் கிட்ட என்ன வாங்கிட்டு வரச் சொன்னேன்?” என்கிற ‘கரகாட்டக்காரன்’ கவுண்டமணி மாதிரி அலட்டலாக விசாரித்துக் கொண்டிருந்தார். ஒரு தலைவராக செயல்பட வேண்டிய தாமரையின் நிர்வாகத் திறமையின்மை பற்றிய கேள்விகள் அவை.

திருப்பள்ளியெழுச்சி பாடல் ஒலிப்பதற்கு முன்பே எழுந்து விட்ட இமானும் ஐக்கியும் தோட்டத்தில் அமர்ந்து சாவகாசமாக பேசிக் கொண்டிருந்தார்கள். 17 பேர்களுக்கு இரண்டே கழிப்பறை இருக்கும் வீட்டில் அதிகாலையிலேயே எழுந்து விடுபவர்கள் புத்திசாலிகள். ‘சந்திரமுகி’ திரைப்படத்தில் பேயைப் பற்றி வடிவேலு சந்தேகம் கேட்க அதற்கு ரஜினி விளக்கம் தரும் காட்சியைப் போல ‘‘ஏம்மா... இந்த ஸ்ட்ராட்டஜின்னா என்ன? அது இருக்கா, இல்லையா... நம்பலாமா... கூடாதா?” என்று ஐக்கியிடம் கேட்டுக் கொண்டிருந்தார் இமான்.

“அண்ணாச்சி… ஸ்ட்ராட்டஜி இருக்கறதுக்கு சில அறிகுறிகள் இருக்கு. டாஸ்க் தர்றப்ப அதுல ஜெயிக்கறதுக்கு உத்திகளைப் பயன்படுத்தறது கூட ஓகே. ஆனா இங்கே என்ன நடக்குதுன்னா ‘நின்னா ஸ்ட்ராட்டாஜி.. நடந்தா ஸ்ட்ராட்டாஜின்னு அதுலயே மக்கள் வாழறாங்க… ஸ்ட்ராட்டாஜின்னா என்னான்னு நம்ம கிட்டயே வந்து விசாரிப்பாங்க. நம்பிடாதீங்க... அதுதான் அவங்க ஸ்ட்ராட்டாஜி” என்று தெளிவாக ஐக்கி விளக்கம் அளிக்க, புரிந்தது போல் மண்டையை ஆட்டினார் இமான்.

விடிந்தது. ‘ரவுடி பேபி’ பாடலை அலற விட்டார்கள். இதைக் கேட்டவுடன் கையில் செருப்பை எடுத்தார் பிரியங்கா. நோ... நோ... பொறுமையாக இருங்கள். அதை செட் பிராப்பர்ட்டியாக வைத்து பாடலின் ஒரிஜினல் எஃபெக்ட்டை கொண்டு வர முயல்கிறாராம். ம்ஹூம்... செருப்பு தேய்ந்ததுதான் மிச்சம். இட்லி மாவு கிரைண்டரை ஆன் செய்து விட்டது போல் ஆங்காங்கே மக்கள் ஆடிக் கொண்டிருந்தார்கள். ஒருவரது நடன அசைவு கூட பார்க்கும்படியாக இல்லை.

 
அபிஷேக் பெரும்பாலோனோர்களை ஒருமையில் விளிப்பது கேட்க சங்கடமாக இருக்கிறது. வயதில் மூத்தவரான இமானைக்கூட ஒருமையில்தான் அழைக்கிறார். அது போல் இப்போதும் இசையிடம் ‘வாடி போடி’ என்று பேசிக் கொண்டிருந்தார். “மைக்ரோ டைம்... மேக்ரோ டைம்னு ரெண்டு இருக்கு” என்று யூட்யூப் விமர்சனம் போலவே பந்தாவாக ஆரம்பித்த அவரின் நீளமான… உபதேசத்தை ஒருவரியாக சுருக்கிப் பார்த்தால் “Life is short... make it sweet’ என்பதுதான்.

பொதுவாக சென்னைத் தமிழை மலினமாகவும் கிண்டலாகவும் அணுகுவதே தமிழ் சமூகத்தின் பழக்கம். சினிமா உருவாக்கி வைத்திருக்கும் போலியான சித்திரம் அது. ஆனால் அசலான சென்னைத் தமிழைக் கேட்கும் போது புரிந்தவர்களுக்கு அது அத்தனை சுவாரசியமானதாக, இனிமையாக இருக்கும். இசை பிரமோவில் இப்படியாக சென்னைத் தமிழில் பேசியது இன்றைய மெயின் நிகழ்ச்சியில் ஏனோ வரவில்லை. ‘கதை சொல்லட்டுமா?’ டாஸ்க்கில் அடுத்தாக அபிஷேக் வந்தவுடன் பல பேர் எழுந்து டீ குடிக்கப் போயிருப்பார்கள். ஏற்கெனவே சொன்னதுதான். ஒருவர் தன் வாழ்க்கையின் துயரத்தை விவரிக்கும் போது அதைப் பொறுமையாக கேட்பதற்கு சமூகம் தயாராக இருப்பதில்லை. “டேய்... நாங்கள்லாம் பார்க்காத கஷ்டமாடா?” என்றே நினைக்கும். ஆனால், அதை உணர்ச்சிகரமான திறமையுடன் உருகி விவரித்தால் பார்வையாளர்களிடம் இருந்து கண்ணீர்த் துளிகளை பெறுவதற்கு வாய்ப்புண்டு. ஒரு சினிமாவில் சென்டிமென்ட் காட்சியை உருவாக்குவதற்கு, அதன் பின்னணியில் ஷெனாயை அலற விடுவது முதல் எத்தனை மாய்மாலங்களை செய்கிறார்கள் என்பதை யோசித்துப் பார்த்தால் ‘அழுகாச்சி’யை வரவழைப்பது எத்தனை சிரமமானது என்பது தெரிந்து விடும்.

ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஓர் ஆதாரமான வலியுடன் கூடிய கதை உண்டு. அது அவருக்கு மட்டுமே அதிக நெகிழ்ச்சியைத் தரும் கதை. ஆனால் அதை உருக்கமாக சொல்லத் தெரிய வேண்டும். அபிஷேக் பெரும்பாலும் சினிமா வசனங்களாகவே யோசிப்பார் போலிருக்கிறது. பொறுப்புள்ள தன் அக்காவையும் பொறுப்பற்ற தன்னையும் ஒப்பிடும் போது “அவ டிஷ்யூ பேப்பர்னா நான் அழுக்கு... அவ செருப்புன்னா நான் சாணி” என்று வசனமாகவே பேசுகிறார். இது செயற்கையாகத் தெரிகிறது.

இது போன்ற தடைகளைத் தாண்டி விட்டால் அவர் விவரித்ததில் ஒரு ‘அண்ணாமலை’ கதை இருந்தது. மற்றவர்களுக்கு உதவி செய்யும் பழக்கமுள்ள அப்பா, அந்த ‘கர்ணன்’ குணாதிசயம் காரணமாகவே துரோகத்தால் போர்க்களத்தில் அம்பு பாய்ந்து உயிர் துடித்து இறந்த கதை அது. ‘யாரடி மோகினி’ திரைப்படத்தில் வரும் ரகுவரன் – தனுஷ் போலவே அபிஷேக்கும் அவரது அப்பாவும் நெருக்கமான உரிமையுடன் பழகிக் கொள்வார்கள் போல. தனது டிரைவருக்கு பெருந்தொகையை கடனாக கொடுத்த அபிஷேக்கின் அப்பா, அதில் ஏற்பட்ட சிக்கலால் தன் சொத்து முழுவதையும் இழக்கிறார். அந்த உளைச்சல் காரணமாகவே இறந்தும் போகிறார்.

 
இந்தச் சமயத்தில் தன் திருமணப் பிரச்னையை எதிர்கொள்ளும் சிக்கலில் இருக்கிறார் அபிஷேக். எனவே அப்பாவின் பிரச்னையை கண்டுகொள்ளவில்லை. ஆனால் தந்தையின் இறப்பிற்குப் பிறகுதான் அந்தச் சோகத்தின் கனம் தெரிகிறது. “நான் உதவுகிறேன் என்று ஒருவேளை நான் சொல்லியிருந்தால் கூட என் அப்பா அத்தனை சீக்கிரம் இறந்திருக்க மாட்டார்” என்கிற குற்றவுணர்ச்சி அழுத்துகிறது. பிறகு இரண்டே வருடத்தில் அப்பாவின் சொத்துக்களை மீட்கிறார் அபிஷேக்.

“வாழ்க்கையில் வலி என்பது எல்லோருக்கும் வர்றதுதான். அதை நேரடியா சந்திக்கத் தயாரா இருங்க” என்று இறுதியில் மெசேஜ் சொன்னார். அபிஷேக் சொன்ன கதையில் உள்ள சென்ட்மென்ட்டை எல்லாம் ஒதுக்கி விட்டு பிராக்கடிக்கலாக பார்த்தால் ‘தனது சொத்தே அழிந்து போகும் வகையிலா ஒருவர் கடன் தருவார்? அதுவும் தன்னிடம் பணிபுரியும் டிரைவருக்கு? அந்த அளவிற்கா அவர் ஏமாளி?” என்கிற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகிறது. ‘தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும்’ என்று பழமொழி கூட இருக்கிறதே?!

“என்சைக்ளோபிடியோ விக்கறவன் மாதிரிதான் பேச்சை ஆரம்பிச்சான். ஆனால கடைசில ‘எடுத்த சபதம் முடிப்பேன்’னு சொன்ன இடத்துல பாஸ் ஆயிட்டான்” என்று அபிஷேக்கின் பேச்சை சுருக்கமான விமர்சனமாக இமானிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ராஜூ. கரெக்ட்டுதான். கன்ஃபெஷன் ரூமுக்குத் தாமரையை அழைத்த பிக்பாஸ் “நான் உன் கிட்ட என்ன வாங்கிட்டு வரச் சொன்னேன்?” என்கிற ‘கரகாட்டக்காரன்’ கவுண்டமணி மாதிரி அலட்டலாக விசாரித்துக் கொண்டிருந்தார். ஒரு தலைவராக செயல்பட வேண்டிய தாமரையின் நிர்வாகத் திறமையின்மை பற்றிய கேள்விகள் அவை.

“இனிமே பார்த்துக்கறேன் முதலாளி’’ என்றபடி வெளியே வந்த தாமரை “மக்களே... கேட்டுக்கங்க. காலைல வெள்ளன எழுந்துக்கணுமாம்... போர்வையை மடிச்சு வெக்கணுமாம்… டூத்பேஸ்ட் எடுத்து பிரஷ்ஷில் வெச்சு பல்லைத் தேய்க்கணுமாம். சுச்சா.. கக்கா லாம் போயிடணுமாம்… மத்தியானம் பன்னிரெண்டு மணி வரை பறக்காவெட்டி மாதிரி பப்பரப்பரேன்னு உக்காந்திருக்கக்கூடாதாம்” என்று பிக்பாஸ் சொன்ன உத்தரவுகளை சிரித்துக் கொண்டே சொல்ல மக்கள் வழக்கம் போல் அவரை இடது கையால் ஹேண்டில் செய்து ‘போ போ... போயி வீட்ல பெரியவங்க இருந்தா அனுப்பு’’ என்று சிரித்தார்கள்.

 
“வேற ஒரு மேட்டர் இருக்கு. அதை நான் நேரம் வரும் போதுதான் சொல்லுவேன்” என்று இக்கு வைத்து பேசினார் தாமரை. அடடே! இப்போதுதான் தலைவருக்கான ராஜதந்திரம் மெலிதாக வரத்தொடங்கியிருக்கிறது. “தலைவருக்கு மரியாதை தரணுமாம்” என்று பிக்பாஸ் உத்தரவுகளில் தனது எக்ஸ்ட்ரா பிட்டையும் சாமர்த்தியமாக சேர்த்துக் கொண்டதும் சிறப்பு.

அபிஷேக்கைத் தொடர்ந்து தன் கதையை சொல்ல வந்தார் தாமரை. “உலகத் தமிழர்களுக்கு வணக்கம்” என்று ஆரம்பித்தார். (அடடே!). தாமரையின் வாழ்க்கைப் பின்னணியை பெரும்பாலான அடித்தட்டு பெண்களின் வாழ்க்கையோடு இணைத்துப் பார்க்கலாம். வறுமையான குடும்பம். ‘நெல்லுச் சோறை’ கண்ணால் கூட பார்த்திராத வீடு. அம்மா கூலி வேலைக்குச் சென்று விடுவதால், தம்பி, தங்கைகளைப் பார்த்துக் கொள்ள பள்ளிக்கூடம் போகாத அக்காதான் தாமரை. வீட்டின் வறுமை சிறிதாவது குறையட்டுமே என்று நாடகத்தில் தாமரையை சேர்த்து விடுகிறார்கள். அங்கு ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி அவர் கொண்டு வரும் சொற்பமான பணம் சற்று நிம்மதியை அளிக்கிறது. தன்னிடம் கண்ணீர் சிந்திய சக நடிகரிடம் காதல் கொண்டு திருமணம் நடக்கிறது. ஆனால் அவர் ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்பதால் அது தொடர்பான கொடுமைகளை தாமரை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

எனவே அங்கிருந்து வெளியே வந்து சூழல் காரணமாக இன்னொரு திருமணம். இந்த ஆசாமி நல்லவர் என்றாலும் குடும்பத்தின் மீது அக்கறை செலுத்தாத அப்பாவி. எனவே அந்தச் சுமையையும் சேர்த்து தாமரையே சுமக்க வேண்டியிருக்கிறது. மாமியார் தங்கமானவராக அமைந்தது ஒரு சிறிய அதிர்ஷ்டம். இரண்டாவது திருமணத்தின் மூலம் ஒரு மகன் பிறந்தாலும் தன் மூத்த மகனை பல நாட்களாக பார்க்க முடியாத ஏக்கத்தில் இருக்கிறார் தாமரை. பிரித்துக் கொண்டு சென்று விட்டார்கள். ‘பிக் பாஸ்’ வாய்ப்பு வர, என்ன.. ஏது என்று தெரியாமல் முதலில் அச்சப்பட்டிருக்கிறார் தாமரை. அறிந்தவர்கள் தைரியம் சொல்லி அனுப்பியிருக்கிறார்கள். இதுவே அவரின் கதைச் சுருக்கம்.

 
“இந்த வீட்டுக்கு வந்தப்புறம்தான் நான் சந்தோஷமா ஆடிப் பாடினேன். சின்ன பொண்ணா இருந்த போது விளையாடியதே கிடையாது. இங்க வந்துதான் நல்ல சோறு சாப்பிட்டேன். இத்தனை வருஷம் கழிச்சு எனக்கு கொஞ்ஞூண்டு நிம்மதி கிடைச்சதுன்னா அது பிக்பாஸ் வீடுதான்” என்று தாமரை அடிக்கடி சொல்வதையும் அவரது இந்த வாழ்க்கைப் பின்னணியையும் இணைத்து யோசிக்கும் போது நெகிழ்வாக இருக்கிறது.

நீங்கள் பல இல்லத்தரசிகளைக் கவனித்திருக்கலாம். தங்களின் பெற்றோர் வீடுகளுக்குச் செல்லும் போதோ, திருமண வீடுகளில் உறவினர்களைச் சந்திக்கும் போதோ, தனது நண்பர்களிடம் சிரித்து பேசும் போதோ, அவர்களுக்குப் பிடித்த வெளியிடங்களுக்குச் செல்லும் போதோ ‘வேறு உற்சாமான ஆளாக’ மாறியிருப்பதைக் கவனித்திருப்பீர்கள். ஒரு இறுக்கமான, சலிப்பூட்டும் சூழலில் தொடர்ந்து இருந்து சற்று நேரம் வெளியே வந்திருக்கும் சுதந்திரக் காற்றின் ஆசுவாசம் அது.

தாமரையின் யதார்த்தமான பேச்சிற்கும் டிஸ்லைக் விழுந்தது ஆச்சரியம். “உங்க மனசுக்கு நீங்க பிக்பாஸ் டைட்டில் ஜெயிக்கணும்” என்று நெகிழ்ச்சியுடன் வாழ்த்தினார் அபிஷேக். தாமரை வருங்காலத்தில் நிம்மதியாக இருப்பார் என்று தோன்றுகிறது.

டப்பிங் குரலைத் தவிர்த்து விட்டு தெலுங்கு நடிகையை தமிழ் படத்தில் நேரடியாக பேச வைத்தது போன்று பேசினாலும் பவானியின் குரலில் எப்போதும் ஷெனாய் இசையின் சோகம் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. ஒருவேளை பவானியின் சோக காட்சிகளை மட்டுமே எடிட்டிங்கில் சேர்க்கிறார்களா என்று தெரியவில்லை. ஒருபக்கம் பாவமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் சீரியல் காட்சி போலவே இருப்பதால் மெல்லிய எரிச்சலும் வருகிறது. தன் வாழ்வில் நடந்த துக்கததை எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பதும் பேசிக் கொண்டிருப்பதும் ஒருவகையான மனப்பிரச்சினை.

 
“என் வாழ்க்கைல இன்னொருத்தர் வந்தாரு. இருந்தாலும் என் கணவரை மறக்க முடியலை. ‘அவர்தான் உங்க உருவத்துல வந்திருக்காரு’ன்னு அடிக்கடி சொல்லுவேன்” என்று சோகமாக சொல்லிக் கொண்டிருந்தார் பவானி. இப்படி அவர் சொன்னதுதான் இரண்டாவது வாய்ப்பு பறிபோனதற்கு காரணம் என்று தோன்றுகிறது. “என் வாழ்க்கை தனியாவே முடிஞ்சு போகும்” என்று அரற்றிய பவானியை “நாங்கள்லாம் எதுக்கு இருக்கோம். உன்னை சிரிக்க வெச்சு கூட நிற்போம்” என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார் இமான். சந்தடி சாக்கில் ‘அண்ணன்’ என்று சொல்லி தன் வயதை நைசாக குறைத்துக் கொண்டார்.

அடுத்து கதை சொல்ல வந்தவர் வருண். பழைய நகைச்சுவை நடிகர் ஐசரி வேலனின் பேரன். “இவனுக்கு என்னப்பா born with silver spoon-ன்னு வெளியே இருக்கறவங்க நெனப்பாங்க... ஆனா உள்ள படற கஷ்டம் எங்களுக்குத்தான் தெரியும். எங்க குடும்பமும் முட்டி மோதி ஒவ்வொரு அடியா கஷ்டப்பட்டுத்தான் வந்தது. அதுக்கு எங்க தாத்தாதான் காரணம். தக்க சமயத்தில் எம்ஜிஆர் உதவி செஞ்சிருக்காட்டி நாங்க நடுத்தெருவுல வந்திருப்போம். எங்க வளர்ச்சிக்கு எங்க மாமா ஐசரி கணேஷ் உழைப்பு ஒரு பெரிய காரணம். நடிக்கற வாய்ப்பு எனக்கு ஈஸியா வந்துடுல. கும்பல்ல கோவிந்தாவாதான் வந்தேன்... நடிகர்ன்ற தகுதிக்கா நிறைய உழைக்கறேன்” என்று வருண் சொன்னது ஒருவகையில் உண்மையாகவே இருக்கலாம். “அவங்களுக்கு என்னப்பா...” என்று வெளியில் இருந்து நாம் பார்க்கிறவர்களின் இன்னொரு பக்கம் வேறு மாதிரி பரிதாபமானதாக இருக்கலாம்.

ஆனால் இந்த சென்ட்டிமென்ட்டையும் உடைத்து விட்டுப் பார்த்தால், செல்வாக்குள்ள பின்னணி இருப்பதால்தான் வரூணால் ஒரு முன்னணி இயக்குநரின் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க முடிகிறது என்பதும் உண்மைதானே? ஒரு சிறிய வாய்ப்பு கூட கிடைக்காமல் எத்தனை ஏராளமான இளைஞர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்?!.

 
‘’லைக் போட்டா போடுங்க... போடாட்டி போங்க” என்று தன் பேச்சின் இறுதியில் வருண் அலட்சியமாக சொன்னதாலோ என்னமோ ஒருவர் கூட லைக் போடாதது பரிதாபம்.

“சாப்பிடறவங்க தட்டை சரியா கழுவி வைக்கிறதில்லை” என்று தலைவரிடம் பந்தாவாக புகார் தந்து கொண்டிருந்தார் பிரியங்கா. “அதெல்லாம் சரியாத்தான் கழுவுறாங்க... நான்தான் பக்கத்துல இருந்து பார்த்தேனே?” என்று தனது அரசியல் குருவிற்கே கவுன்ட்டர் தந்து கொண்டிருந்தார் தாமரை. (அமாவாசை... நீயா பேசற?!). இப்போதுதான் தலைவருக்கான கெத்து தாமரையிடம் துளிர்க்கத் தொடங்கியிருக்கிறது. (அப்போ... தாமரை மலர்ந்துடுமா?!).

இமானுக்கு இசைக்கும் நடுவில் ஒரு பிரச்னை. (‘அது தெரிந்த கதைதானே?” என்று முனகாதீர்கள்… நோ நோ…. நான் அந்த இமானின் இசையை சொல்லவில்லை).

“நீங்க சொன்ன ரெண்டு விஷயம் எனக்கு ஹர்ட் ஆச்சு?” என்று ஆரம்பித்தார் இசை. “என்ன விஷயம்னு சொல்லுங்கம்மா.. நான் எதையுமே சீரியஸா சொல்லியிருக்க மாட்டேன். எல்லாமே தமாஷ்தான்” என்று தன் தரப்பு நியாயத்தை விளக்குவதற்கு தயாராக இருந்தார் இமான். “அதை சொல்ல மாட்டேன். ஆனா எனக்கு ஹர்ட் ஆச்சு” என்று இசை சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்க “மூதேவி... அது என்னன்னு சொல்லேன். அப்பத்தானே விளக்கம் தர்ற முடியும்” என்பது போன்ற டயலாக்கை வேறு மொழியில் கோபமே இல்லாமல் தன்மையாகச் சொன்னார் இமான்.

ஒருவழியாக காரணத்தைச் சொன்னார் இசை. “நான் எப்பவும் பாடிட்டே இருக்கேன்னு சொன்னீங்க.. அதுதான் எனக்கு ஹர்ட் ஆச்சு” என்று இசை சொன்ன போது ‘கடவுளே... வெளங்கிடும்… இதுக்கா இவ்ளோ பில்டப்பு” என்று சொன்னது இமான் அல்ல. நம் மைண்ட் வாய்ஸ்தான்.

ஒரு சீட்டுக்கட்டில் எல்லாமே ஜோக்கராக இருந்தால் எப்படிப்பா விளையாடறது? இந்த சீசன் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறது.

- விகடன்-
SHARE