யாழில். பொலிஸாரினால் தப்பிக்கவிட்ட இருவரில் ஒருவர் கைது – மற்றையவர் நீதிமன்றில் சரண்..!!!


யாழ்ப்பாணம் - ஏழாலையில் வீடொன்றுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியவர்களை பொலிஸார் தப்பிக்கவிட்ட நிலையில் ஒருவர் மீளவும் கைது செய்யப்பட்டதுடன் மற்றொருவர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

இவ்வாறு சுன்னாகம் பொலிஸார் அறிவித்துள்ளனர் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வட பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்தார்.

ஏழாலையில் கடந்த 4ஆம் திகதி இரவு வீடொன்றினுள் புகுந்த சிலர் அங்கிருந்தவர்களை தாக்கினர். தாக்குதல் மேற்கொண்டவர்களில் இருவர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களினால் மடக்கிப் பிடித்து சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

எனினும், பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதுதொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் அலுவலகத்திலும் பாதிக்கப்பட்டவர்களினால் முறைப்பாடு வழங்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட தரப்பு மற்றும் சுன்னாகம் பொலிஸார் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வடபிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் முன்னிலையில் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டனர்.

தாக்குதல் நடத்த வந்தவர்களை மூன்று நாள்களுக்குள் கைது செய்வதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பை தருவதாகவும் சுன்னாகம் பொலிஸார் பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சந்தேக நபர்களில் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரினால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். மற்றைய சந்தேக நபர் தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் சரணடைந்தார் என்று பொலிஸாரினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
Previous Post Next Post


Put your ad code here