Thursday 21 October 2021

பிக்பாஸ் 5 : 18ம் நாள் | காமெடி வில்லன் அபிஷேக், அதிகார பிரியங்கா - யார் இவர்களுக்கு எல்லா உரிமையும் கொடுத்தது?

SHARE


"இதுதான் என் கேம்” என்று அபிஷேக் சொல்லிக் கொண்டிருக்க, “இதெல்லாம் ஒரு பொழப்பா தம்பி... ரொம்ப கேவலமா இருக்கு” என்று இமான் வருத்தப்பட ‘அப்படித் துப்பிட்டு கிளம்பு’ என்பது போல் வெட்கமேயில்லாமல் எதிர்வினையாற்றினார் அபிஷேக்.

"கைக்கு கை மாறும் பணமே... உன்னைக் கைப்பற்றத் துடிக்குது மனமே’’ என்று ஒரு பழைய தமிழ் சினிமா பாட்டு இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் நிகழ்ந்து கொண்டிருப்பதும் இதுதான். பண்டமாற்று என்னும் முறை மனித குலத்தில் இருந்தபோது அது சில நடைமுறைக் குழப்பங்களை ஏற்படுத்தியதால் அதற்கு மாற்றாக ‘பணம்’ கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், பணம் என்னும் விஷயம் அதை விடவும் பல கொடூரமான குழப்பங்களை இன்றுவரை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதைத்தான் மனித வரலாற்றில் பார்த்துக் கொண்டு வருகிறோம்.

“இந்தப் பொருளை வைத்திருந்தால் நீங்கள் பிழைக்க முடியும். இல்லையென்றால் உங்களுக்கு நிச்சயம் மரணம்தான்” என்று நம்ப வைத்து ஒரு விஷயத்தை மனிதர்கள் கூட்டத்தின் நடுவில் போடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதை வைத்து பிழைக்கிறவனை விடவும் அதை எடுக்கப் போகிற மூர்க்கமான சண்டையில் சாகிறவர்கள்தான் அதிகம் இருப்பார்கள்.

கேவலம் ஒரு பிளாஸ்டிக் தகடு... அதை அலங்காரமாக பெடஸ்டலில் வைத்தவுடன் அதற்கு எப்படி உயிர் வந்துவிடுகிறது பார்த்தீர்களா? அதைக் கைப்பற்றுவதற்கும் பாதுகாப்பதற்கும் எத்தனை போட்டி?

 
பிக்பாஸ் என்பது ரியாலிட்டி ஷோதான் என்றாலும் மனித வாழ்க்கையின் துண்டுகளைத்தான் அது பிரதிபலிக்கிறது. பிக்பாஸில் பிரபலமானவர்கள் போட்டியாளர்களாக இருக்கிறார்கள் என்றால், நிஜ வாழ்க்கையில் நாம்தான் அந்தப் போட்டியாளர்களாக இருக்கிறோம். எனவே இவர்களைப் பற்றி குறை சொல்லி வம்பு பேசுவதை விடவும், இந்த நிகழ்ச்சியின் மூலம் நம் அந்தரங்க கீழ்மைகளை நாமே எப்படிக் கண்டுபிடிக்கிறோம் என்பதுதான் இதைப் பார்ப்பதில் நமக்கு கிடைக்கும் வெற்றி இருக்கிறது.

ஒரே நாளில் கசகசவென்று பல நிகழ்வுகள் அடுக்கடுக்காக நடந்தால் இந்த நிகழ்ச்சியை எடிட் செய்பவர்களுக்கு மட்டுமல்ல, பார்க்கும் நமக்கும் மண்டை காய்ந்து விடும். இந்த எபிசோடில் அதுதான் நிகழ்ந்தது.

பிக் பாஸ் வீட்டில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் யாரை நிறுத்தி விசாரித்தாலும் “பாஸ்... நான் தாமரையைக் காப்பாத்தியாகணும், டைம் இல்ல... அவசரமா போறேன், அப்புறமா வந்து பேசறேன்” என்று நிற்காமல் ஓடுகிறார்கள். ‘டேய் யார்ரா நீங்கள்லாம்?’

பிக்பாஸ் எபிசோட் 18-ல் என்ன நடந்தது?

நாணயங்களைத் திருடும் உக்கிரமான போட்டி இன்னமும் நிறையவடையாமல் அதிக குழப்பங்களுடன் தொடர்ந்தது. பிணத்தை வீட்டுக்கு வெளியில் வைத்து உறவினர்கள் சுற்றி அமர்ந்திருப்பது போல் இசை, தாமரை உள்ளிட்டவர்கள் கார்டன் ஏரியாவில் நாணயத்தைச் சுற்றி அமர்ந்திருக்க “நான் இதை எடுத்து ஜெயில்ல ஒளிச்சு வைக்கறேன். அப்புறம் பார்ப்போம்” என்று அபிஷேக் அதிரடி முடிவு எடுக்க “நான் சொல்லிடுவேன்” என்று பாய்ந்து எழுந்தார் இசை. “லூஸூ உனக்காகத்தான் எடுக்கிறேன்” என்று அபிஷேக் சொன்னவுடன் பம்மி அமர்ந்துவிட்டார்.

தாமரை, சின்னப்பொண்ணு, இசை ஆகியோர்களைக் காப்பாற்றுவதற்காக முன்னணி போட்டியாளர்கள் படும் சிரமங்களையும் நாடகங்களையும் பார்த்தால் இதுதான் தோன்றுகிறது. “உங்களையெல்லாம் பார்த்தா அவ்வளவு நல்லவங்களா தெரியலையே?!”

 
ஒரு சமூகத்தில் எல்லா வசதிகளுடனும் மேலே இருப்போர், கீழே இருப்போரை ‘கருணையுடன்’ பார்ப்பதற்கு பின்னால் பல அரசியல்கள் உள்ளன. ‘வறுமையை ஒழிப்போம்’ என்று ஒவ்வொரு அரசியல்வாதியும் மேடையில் எதற்கு முழங்குகிறார்? வறுமையை ஒழிப்பதற்காக அல்ல. ஒளிப்பதற்காக... இதே கருணை அரசியல்தான் பிரியங்கா குரூப்பிடம் தாண்டவம் ஆடுகிறது. தாமரை உள்ளிட்டவர்களுக்கு உதவுவதாக இவர்கள் வெளியில் காட்டிக் கொண்டால் இவர்களின் மைலேஜ் இன்னமும் உயரும். அதுதான் இவர்கள் உதவுதற்குப் பின்னால் உள்ள சூட்சுமம். இதை ராஜு ஏற்கெனவே அம்பலப்படுத்திவிட்டார்.

‘சிட்பண்டில்’ பணம் போட்டு ஏமாந்த மிடில் கிளாஸ் ஆசாமியைப் போல தன்னிடமிருந்து திருடப்பட்ட நாணயம் குறித்து ஐக்கி ஓவென்று அழ, “இந்தக் கூட்டுக்களவாணித்தனமே வேண்டாம்... தனித்தனியா ஆடுவோம்” என்கிற ஞானோதயம் இசைக்கு தாமதமாகப் பிறக்க, சிறையில் இருக்கும் நிரூப்பிடம் ‘நாணயத்தை திருப்பி வெச்சுடு’ என்று கேட்கிறார். “குழந்தைகளை எல்லாம் ஏன் வேலைக்கு எடுக்கறீங்க?” என்று இதற்காக கோபம் கொண்டு அபிஷேக் கத்துகிறார். நீரூப், பிரியங்காவிடம் நாணயத்தைக் கொடுக்க முயலும்போது “பார்த்துட்டேன்... பார்த்துட்டேன்’ என்று வருண் சைரனாக மாறி அலற, பிரியங்காவும் சிறைக்குச் செல்ல நேரிடுகிறது. பாவனியிடமிருந்து கை மாற்றிய காரணத்தினால் சுருதியும் இவர்களுடன் சிறைப்பறவையாக ஸ்ருதி சேர்கிறார்.

‘இப்படி உக்காந்துக்கிட்டே இருந்தா நூறாவது எபிசோட் வரைக்கும் உக்காந்திருக்க வேண்டியதுதான்’ என்று முடிவு செய்த சிபி, "நாணயத்தை நான் எடுத்து விடுகிறேன். தேவையானவர்களுக்குத் தருகிறேன்” என்று அங்கிருப்பவர்களிடம் அறிவித்துவிட்டு பிறகு தாமரைக்கும் இசைக்கும் ‘அதிகாரபூர்வ நாணயம்’ கிடைக்க வழி செய்கிறார். வீட்டின் தலைவராக இருந்து கொண்டு அவர் இதைச் செய்வது முறையானதல்ல. ஆனால் வேறு வழியும் இல்லை. ஆட்டம் முடிய வேண்டும்.

 
‘ஐந்து நாணயங்கள் கைப்பற்றப்பட்டு விட்டன’ என்று அறிவித்த பிக் பாஸ், சிறையில் இருப்பவர்களை ரீலீஸ் செய்தவுடன் ‘ஹப்பாடா... இந்த நாசமத்த கேம் இத்தோடு முடியப் போகுது போல’ என்று நாம் நிம்மதியாக சாய்ந்து உட்கார்ந்தால் இனிதான் இன்னமும் அதிக உக்கிரத்துடன் தொடர்ந்தது. ஆம், மற்றவர்கள் ஒளித்து வைத்திருக்கும் நாணயங்களைப் பறிக்கும் கொலைவெறியோடு ஒவ்வொருவரும் திரிந்தார்கள்.

‘கெடக்கறதெல்லாம் கெடக்கட்டும். கெழவியை தூக்கி மனைல வை’ என்கிற பழமொழி மாதிரி, நாணயத்திற்காக ஒருபக்கம் கொலைவெறிப் போட்டி போய்க் கொண்டிருக்கும் போது பாவனியும் அக்ஷராகவும் இன்னொருபக்கம் குடுமிப்பிடிச் சண்டையை ஆரம்பித்தார்கள். “என்கிட்ட உனக்கு ஏதாவது பிரச்னையா? எதுவா இருந்தாலும் மூஞ்சு மேல பேசு” என்பதை ‘’கார்டு மேல பதிமூணு நம்பர் இருக்குல்ல சார்... அதைச் சொல்லுங்க” என்கிற டோனில் அக்ஷராவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் பாவனி.

விடிந்தது. “பாவனி என்கிட்ட வலிய வந்து சண்டை போடறா... கத்தறா... நான் அவளைப் பத்தி எதுவும் பேசலை. பிரியங்கா பத்திதான் பேசினேன்” என்று ராஜூவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் அக்ஷரா.

 
“யம்மா... இது கேம்தான். இல்லைங்கலே... ஆனா, இங்க சில வார்த்தைகள்லாம் அத்துமீறிப் போகுது. கேக்க நல்லாயில்லையே?” என்று சங்கடத்துடன் பிரியங்காவிடம் இமான் சொல்ல “நீங்க எந்த சென்டர்ல நிக்கறீங்கன்னு எங்களுக்கும் தெரியும்” என்று எகத்தாளமாக பதில் அளித்தார் பிரியங்கா.

ஐந்து நாணயங்களை தூக்கிப் போட்டு வீட்டில் உள்ளவர்களை கொலைவெறியில் தள்ளியது போதாதென்று 'எட்டு எட்டா உலகம் இருக்கு ராமையா’ என்கிற பாட்டைப் போட்டு இன்னமும் வெறியேற்றினார் பிக்பாஸ்.

வில்லன் யாரென்று தெரியாமல் ஹீரோ அவனை அடித்து விட்டுச் சென்றுவிடுவார். “அவன் யாருன்னு தெரியல... நான் அவனைப் பழிவாங்கியே ஆகணும்” என்று வில்லன் படம் முழுவதும் மண்டையைப் பிய்த்துக் கொண்டு கதறிக் கொண்டேயிருப்பார். இப்படியாக சில சீன்களை சினிமாக்களில் பார்த்திருக்கிறோம் அல்லவா? அப்படியாக “அக்ஷரா ஒரு காயின் ஒளிச்சு வெச்சிருக்கா... அது எங்கு இருக்குன்னு எனக்கு தெரிஞ்சே ஆகணும். யாரோ அவளுக்கு ஹெல்ப் பண்றாங்க. எனக்கு செமயா காண்டாவுது” என்று இந்த எபிசோட் முழுவதும் அந்த வில்லனைப் போல கதறிக் கொண்டேயிருந்தார் பிரியங்கா. அக்ஷராவின் மீது ராஜூ செலுத்தும் பாசம் இவரை காண்டாக்குகிறது போல.

 
இசை வைத்திருந்த நாணயத்தை யாரோ சுட்டு விட்டார்கள் போலிருக்கிறது. ‘’பத்திரமா வெச்சுக்கோ” என்று சுருதி ஏற்கெனவே எச்சரித்திருந்தார். இசை இப்படியா வெள்ளந்தியாக இருப்பார்? “ண்ணா... எடுத்திருந்தா கொடுத்திருங்கண்ணா” என்று வளர்ந்து கெட்ட நிரூப்பிடம் பரிதாபமாகக் கெஞ்சிக் கொண்டிருந்தார் இசை. CCTV இல்லாத துணிக்கடையில் ஒரு ஆளையே மேலே ஏற்றி உயரத்தில் அமர்த்தி வைத்திருப்பதைப் போல, உயரத்தில் அமர்ந்து எல்லோரையும் கண்காணித்துக் கொண்டிருந்தார் அபினய். (ஹப்பாடா... நமக்கு ஒரு கேமரா மிச்சம்... இது பிக்பாஸ் டீமின் மைண்ட் வாய்ஸ்).

“சின்னப் பொண்ணு... வாங்க உங்களை செக் பண்ணணும்” என்று பிரியங்கா அவரை அழைத்துச் சென்றது அராஜகத்தின் உச்சக்கட்டம். இப்படித் தனிநபர்களையும் அவர்களின் உடமைகளையும் சோதிக்கும் அதிகாரத்தை இவருக்கு யார் தந்தது? விதி புத்தகத்தில் அப்படி இருக்கிறதா? பிக் பாஸ் வீட்டை ஏதோ தனக்கு சொந்தமாக கருதிக் கொள்ளும் பிரியங்காவிடம் மேட்டிமைத்தனம் பல இடங்களில் குரூரமாக வெளிப்படுகிறது. அதற்குத்தான் சொன்னேன்... தாமரை, சின்னப்பொண்ணு போன்றவர்களிடம் இவர்கள் காட்டுவது கருணையல்ல, தனக்காக தேடிக் கொள்ளும் மைலேஜ்.

அக்ஷரா ஒளித்து வைத்திருப்பதை எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும் என்கிற வெறியே பிரியங்காவுக்கு ஏற்பட்டுவிட்டது. இதற்காக ராஜூவின் பெட்டை ஆராய்ந்து கொண்டிருந்தார். பிறகு ராஜூ, அபிஷேக், பிரியங்கா ஆகிய மூவருக்குள்ளும் நடந்த அந்த உரையாடல் இருக்கிறதே? மனித மனதின் உள்ளே ஒளிந்திருக்கும் விசித்திரமான வன்மங்களுக்கான சில துண்டுகளை அம்பலப்படுத்தும் பகுதி அது. எனவேதான் பிக்பாஸ் எடிட்டிங் டீம் இதை கட் செய்து விடாமல் நீளமாகக் காட்டிக் கொண்டிருந்தது.

“நீ ஒரு டிராமா பண்றேன்னு எனக்குத் தெரியும். அதை நான் கொண்டாடறேன்... உனக்குப் புரியுதா? இந்த கேம் நல்லாயிருக்குல்ல” என்று ராஜூவிடம் நைச்சியமாகச் சிரித்து சதுரங்க ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தார் பிரியங்கா. இவருடன் பிறகு வந்து இணைந்தார் அபிஷேக். ஆனால் கடப்பாறையை விழுங்கிவிட்டு இஞ்சி கசாயம் குடிப்பது போன்ற முகபாவத்துடன் இவர்களைச் சாமர்த்தியமாக எதிர்கொண்ட ராஜூவின் கல்லுளிமங்கத்தனத்தை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். “உன் பக்கத்துலயே உக்காந்து உன்னை ஒருத்தன் செஞ்சிட்டு இருக்கான்” என்று ராஜூ சொல்ல, அது நான்தான் என்று சொல்லாமல் சொல்வதுபோல தானாக வந்து ஆஜர் ஆனார் அபிஷேக்.

 
‘அவனின்றி ஒர் அணுவும் அசையாது’ என்கிற வாக்கியத்தை ‘அபிஷேக் இன்றி ஓர் அணுவும் அசையாது’ என்று மாற்றிவிடலாம். ஆம், பிக்பாஸ் வீட்டைப் பொறுத்தவரை அபிஷேக் தன்னை அப்படியாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார். இந்த நாடகத்தின் சூத்ரதாரி இவர் மட்டுமே. “ஏய் நீ இங்க வா... நீ இங்க நில்லு... நல்லா இடுப்ப வளைச்சு நெளிச்சு ஆடணும்... புரியுதா?” என்று ‘பருத்திவீரன்’ கார்த்தி, ஆட்டக்காரர்களை இம்சை செய்வதைப் போல, அந்த வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் தன்னுடைய ஸ்கிரிப்ட்டுக்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் அபிஷேக்.

“உன்கிட்ட இருந்து அக்ஷராவை பிரிக்கறதுக்கு எனக்கு ரெண்டு நிமிஷம் ஆகாது” என்று ராஜூவிடம் அபிஷேக் அடித்த வாய்ச்சவடால் எல்லாம் வன்மத்தின் உச்சம். இதுவரை தமிழ் சினிமாவில் வந்த அத்தனை வில்லன்களையும் ஒரே உருவத்தில் பார்த்ததுபோல் இருந்தது. என்னவொன்று இவர் காமெடி வில்லன். “என் முகம் கேமரால தெரியணும்னுதான் பிரியங்கா கூடவே ஒட்டிட்டு இருக்கேன்... இதுதான் என் கேம்” என்று அபிஷேக் சொல்லிக் கொண்டிருக்க, “இதெல்லாம் ஒரு பொழப்பா தம்பி... ரொம்ப கேவலமா இருக்கு” என்று இமான் வருத்தப்பட ‘அப்படித் துப்பிட்டு கிளம்பு’ என்பது போல் வெட்கமேயில்லாமல் எதிர்வினையாற்றினார் அபிஷேக். இந்த லட்சணத்தில் “நேர்மை இருக்கிற இடத்தில்தான் கோபம் வரும்’’ என்கிற வியாக்கியானம் வேறு.

இந்தச் சண்டை அப்படியே பற்றிக் கொண்டு அக்ஷரா – பிரியங்காவிடம் மாறியது. “நீங்க ரகசியமா மெசேஜ் எழுதிக் காண்பிச்சு நல்ல பெயர் வாங்கிப்பீங்க. நாங்க உண்மையை உரக்கக் கத்தி கெட்ட பெயர் வாங்கிக்கணுமா?” என்று அக்ஷராவிடம் நேரடியாக மல்லுக் கட்டினார் பிரியங்கா. பிரியங்காவிடம் உள்ள சாமர்த்தியம் என்னவென்றால், எதுவென்றாலும் உரக்கப் பேசி அதை கேமராவில் ரிஜிஸ்டர் செய்துவிடுகிறார். ஆனால் சில நாள்களுக்கு முன்னால் “இந்த வீட்டில் யாரு ஃபிலீங்ஸ்ல இருக்காங்க?” என்கிற கிசுகிசு செய்தியை நிரூப்பின் கைகளில் பிரியங்கா, ரகசியமாக எழுதிக் காட்டினார். அது என்ன லாஜிக்? ‘அது வேற வாய்... இது நாற வாய்’ லாஜிக்தான்.

 
“இந்த ராஜூப் பய என் கதைக்கு லைக் போட்டாலும் போட்டான்... இதுங்களுக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சு” என்பது அக்ஷராவின் மைண்ட் வாய்ஸ். பிரியங்கா தன்னைக் குற்றம் சாட்டியதையொட்டி கண்கலங்கினார் அக்ஷரா. ஆட்டோ பிடித்து மெயின் கேட் தாண்டிச் செல்ல நேரமில்லையோ என்னமோ, அங்கேயே உக்காந்து அவர் கலங்க “இன்னாடி இது இந்தப் பொண்ணு அழுவுது?” என்று தாமரை ஆறுதல் சொல்ல வர “இது கேம் ஷோவாமாம்... இப்படித்தான் இருக்குமாம்” என்று வெள்ளந்தியாக சொன்னார் சின்னப்பொண்ணு.

அக்ஷராவிடம்தான் நாணயம் இருக்கிறது போல என்று பிரியங்கா நாள் முழுவதும் கதறிக் கொண்டிருந்தார் அல்லவா? அது கற்பனைதான் போல. ‘தன்னிடம் நாணயம் இல்லை’ என்பதை பிறகு ராஜூவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் அக்ஷரா. (யப்பா டேய் முடியல!).

 
அக்ஷரா – பிரியங்கா பஞ்சாயத்து போதாதென்று அந்த சரவெடி அப்படியே பற்றிக் கொண்டு பாவனி – அபினய்க்கும் இடையே பரவியது. “என்னைப் பத்தி வருண் தப்பாச் சொன்னான்னு நீதானே என்கிட்ட சொன்னே... இப்ப சொல்லு... மூஞ்சி மேல பேசு. நான் பின்னாடில்லாம் பேஸ் மாட்டேன்” என்று அபினய் மீது குற்றம் சாட்டிக் கொண்டிருந்தார் பாவனி. எப்படியும் நாளை பாவனியும் அபினய்யும் உட்கார்ந்து வேறு எதையாவது பற்றி பேசிக் கொண்டுதான் இருக்கப் போகிறார்கள். நாமும் விவஸ்தையின்றி அதைப் பார்க்கத்தான் போகிறோம்.

இதன் இடையில் ஜெயில் சாவி வீட்டின் தலைவர் சிபியிடம் இல்லாமல் ராஜூவிடம் இருந்தது. “உன்கிட்டதானே கொடுத்தேன்” என்று சிபி அபிஷேக்கிடம் கத்திக் கொண்டிருந்தார். (ஜெயில்னாலே அதில் ஊழல் இருக்கும் என்பதை பிக் பாஸ் வீடும் நிரூபித்தது).

 
பாவனி, தாமரை ஆகியோரிடம் சென்று மூளைச்சலவை செய்து அவர்களின் நாணயங்களை வாங்கி தன்னுடையதாக கேமராவில் காட்டி உரிமை கோரிக் கொண்டார் நிரூப். “கவலைப்படாதீங்க… அந்தச் சொத்தை உங்க பேருக்கே மறுபடியும் ரிஜிஸ்டர் பண்ணிடுவேன். என்னை நம்புங்க. நான்தானே உங்களுக்கு எடுத்துக் கொடுத்தேன். மெஜாரிட்டி யாருன்னு தெரிஞ்சாகணும். அதுக்குத்தான் இந்த கேம்” என்பது நிரூப்பின் விளக்கம். (ஏதாவது புரியுதா?!).

“காயின் உன்கிட்ட இருந்தாதான் நீ பொழச்சே. இல்லைன்னா அவ்வளவுதான்” என்று தாமரையை எச்சரித்துக் கொண்டிருந்தார் இமான்.

‘பஞ்சபூதங்கள்’ என்கிற பெயரில் இவர்களிடம் நாணயங்ளைக் கொடுத்துவிட்டு நாணயம் தவறிய பூதங்களாக இவர்களை மாற்றிய பிக் பாஸின் திருவிளையாடலை என்னவென்று சொல்ல!

- விகடன்-
SHARE