2022 வரவு - செலவுத்திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு : 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்..!!!


2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 93 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 153 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் 2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இம்மாதம் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இதனையடுத்து, வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகி, ஏழு நாட்களாக நடைபெற்ற நிலையில், இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

நாளை 23ஆம் திகதி முதல் குழு நிலையிலான விவாதம் இடம்பெறவுள்ளது. இந்த விவாதம், சனிக்கிழமை உள்ளடங்கலாக டிசம்பர் 10ஆம் திகதி வரை 16 நாட்கள் விவாதம் இடம்பெறவுள்ளது.

வரவு – செலவுத் திட்ட மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 10ஆம் திகதி பிற்பகல் 5.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இதேவேளை, இன்றைய இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் எம்.பிக்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here