Tuesday 2 November 2021

பிக்பாஸ் 5 : 30ம் நாள் | தொடரும் தாமரை பாதுகாப்பு இயக்கம், வருணின் ட்விஸ்ட்... அட யாராவது காயினை எடுங்கப்பா..!!!

SHARE

தேசத்தலைவர்கள் ஒருவழியாக தங்களின் பேச்சு வார்த்தையை முடித்துக் கொண்டு வெளியே வந்தார்கள். “ரெண்டு ரெண்டு பேரா பாத்ரூமிற்குள்ள போயி ஜோலிய முடிங்கடா” என்று மக்களின் பிரச்னைக்கு எளிய தீர்வைச் சொன்னார் புதிய பி.ஏ. அக்ஷரா.

இந்த வாரம் ‘நிலம்’ வாரம் என்பதால் நிரூப்பை பெருமைப்படுத்துவது போல் ஏதாவது பாட்டு வரும் என்று பார்த்தால் ‘பாவிப்பயலே… நீ’ என்கிற பாட்டை ஒலிக்க விட்டு தன் அநியாயமான குறும்பை வெளிப்படுத்தினார் பிக் பாஸ். ‘நிலம்’ என்கிற நாணயத்தை நிரூப் வைத்துள்ளதால் அவர் பெட்ரூம் ஏரியாவில் தனது முழு ஆளுமையைச் செலுத்தலாமாம். படுக்கையை கிழித்து (என்ன வில்லத்தனம்!) அதனுள் நாணயத்தை ஒளித்து வைத்திருந்த நிரூப் அதை எடுத்து வந்து பெடஸ்டலில் பெருமிதமாக செருகி வைத்தார்.

நிரூப்பின் அதிகாரம் என்ன... அவற்றை அவர் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பது தொடர்பான விரிவான கடிதம் வந்திருந்தது. அதை நிரூப் சபையில் வாசிக்க ஆரம்பித்தார். ‘பச்சக்கிளிக்கு புல்லட், பேன்ட் சட்டை வாங்கித் தரவும்... பாவப்பட்ட பச்சக்கிளிக்கு ஏஸி ரூம் தரவும்’… என்று வடிவேலு ஒரு நகைச்சுவைக் காட்சியில் தனக்குச் சாதகமான எக்ஸ்ட்ரா பாயிண்ட்டுகளைச் சேர்த்துக் கொள்வார். நிரூப் வாசிப்பதைப் பார்த்தால் இப்படித்தான் இருந்தது. அத்தனை செளகரியமான சலுகைகள். பாவம், இசை இருக்கிறபோது ஒரே வரியில் சொல்லி குழப்பிவிட்டு நிரூப்பிற்கு மட்டும் அடிஷனல் ஷீட் வாங்கி விரிவாக கோனார் நோட்ஸ் எழுதியிருந்தார் பிக் பாஸ்.

 
"இனிமேதான் இந்த காளியோட ஆட்டத்தைப் பார்க்கப் போறீங்க..." என்கிற கெத்துடன் நிமிர்ந்த நிரூப், தனக்கு உதவியாளராக அக்ஷராவை நியமித்தார். உதவியாளர் என்பது கூட சரி. அது என்ன ‘பெண் உதவியாளர்?’ பிக்பாஸின் கணக்கு எப்போதுமே வில்லங்கமானது. ‘வெளில போறதா இருந்தாலும் போறேன்... இவன் கிட்டலாம் என்னால குப்பை கொட்ட முடியாது’ என்று அக்ஷரா பிரமோவில் கெத்தாக சொன்ன போது ‘ஓகே... இன்னிக்கு ஒரு தரமான சம்பவம் இருக்கு’ என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தால் ‘காலைல... எத்தனை மணிக்கு எழுப்பி விடணும் முதலாளி... காப்பியா? டீயா?’ என்கிற ரேஞ்சிற்கு பின்னர் மாறிவிட்டார் அக்ஷரா.

அக்ஷராவின் மனமாற்றத்திற்கு வருண் தந்த ஆலோசனைதான் முக்கியமான காரணம். “அவன் அப்படித்தான் செய்வான். அதிகாரம் வெச்சிருக்கறவங்க கூட இருக்கறதே பெரிய அதிகாரம். அதை வெச்சு எவ்வளவோ செய்யலாம். அமைச்சர் பி.ஏ. போஸ்ட் மாதிரி இது. இந்த வீட்ல நமக்குப் பிடிக்காதவங்களை கட்டம் கட்டலாம். வேலை செய்திருந்தாலும் அவங்களை ‘வேலை செய்யலை’ன்னு சொல்லி தண்டனை வாங்கித் தரலாம் என்று பிறவி வில்லன் மாதிரி வருண் அரசியல் பாடம் எடுக்க “ஓ... இவ்ளோ விஷயம் இதில் இருக்கா?” என்று மனம் மாறிவிட்டார் அக்ஷரா. இத்தனை திறமையாக யோசிக்கும் வருண், இந்த யோசிப்புத் திறனை தனக்காக ஒருமுறை கூட பயன்படுத்திக் கொண்டது போல் தெரியவில்லை.

‘டிரஸ் எடுக்கணும். பெட்ரூம் உள்ள போகலாமா?’ என்று மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்க ‘பொறுங்க.., எதுவா இருந்தாலும் என்னோட பி.ஏ கிட்ட பேசிட்டுத்தான் முடிவு செய்வேன்’ என்று மக்களைக் காக்க வைத்தார் புதிய தலைவர் நிரூப். BB5 வட்டமேஜை மாநாடு கூடியது. இவர்கள் இருவரும் காஃபி ஷாப்பில் அமர்ந்திருப்பது போல் நெடுநேரம் பேசிக் கொண்டேயிருக்க ‘டேய்... கக்கூஸ்ல தண்ணி நின்னுடும்டா.. உங்க பேச்சுவார்த்தைல தீய வைக்க... வெளில வாங்கடா’ என்று வெளியே மக்கள் அலறினார்கள்.

 
சிலர் வாகனங்களின் எந்த ஹாரன் சத்தத்தையும் மதிக்காமல் சாலையை அப்படியே க்ராஸ் செய்ய முயல்வார்கள். அப்படி நிரூப்பின் அறிவிப்பு எதையும் சட்டை செய்யாத இமான், அவர் பாட்டுக்கு விசிலடித்துக் கொண்டே பெட்ரூமிற்குச் சென்று தன் ஆடைகளை எடுக்க “இவர் என்ன இசையமைப்பாளர் இமானா? அவருக்கு மட்டும் ஏன் தனிச்சலுகை?” என்று பிரியங்கா கூச்சலிட, வருணும் பின்பாட்டு பாட 'அண்ணாச்சி. என்னாச்சி’ என்று வந்த நிரூப் ‘கொஞ்சம் வெளில இருங்களேன்’ என்று இமானை கெஞ்சி கேட்டுக் கொண்டார்.

இமான் அண்ணாச்சியிடம் வயதானவர்களுக்கேயுரிய வறட்டுக்குசும்பு நிறைய இருக்கிறது. யாராவது விதி சொன்னால் அதை நைசாக மீறிப் பார்ப்பது அவரது அடிப்படையான குணம் போலிருக்கிறது. வயதானவர் என்பதால் அவரை அதிகம் கண்டிக்கவும் முடியாது. இந்த வசதியை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார் என்று தோன்றுகிறது. பஞ்சாயத்து நாளில் கமலே தலையிட்டால் கூட "என்ன அண்ணாச்சி. இப்படிப் பண்ணுதிய?” என்று சிரித்தபடிதான் சொல்ல முடியும். வேறென்ன செய்வது? இமானின் குணாதிசயத்தை பிரியங்காவும் வருணும் சிறப்பான முறையில் போட்டு உடைத்தார்கள்.

 
பிரியங்கா தன்னைப் போட்டுக் கொடுத்ததால் அண்ணாச்சிக்கு காண்டாகி விட்டது. இது தொடர்பாக பிறகு பிரியங்காவும் இமானும் பேசிக் கொண்ட அந்த உரையாடலை திரும்பவும் ஒரு முறை பாருங்கள். ‘குத்துனா கத்துவேன்... கத்தினா குத்துவேன்’ என்பது போல் தலையைப் பிய்த்துக் கொள்ளும் குழப்பமான உரையாடலுக்கு இது ஒரு கச்சிதமான உதாரணம்.

‘நான் வெச்சிருந்த பென்சிலை நீ ஏன் எடுத்தே. அப்புறம் நான் எப்படி ஹோம்ஒர்க் செய்யறது.. மிஸ் என்னைத்தானே திட்டுவாங்க’ என்கிற ரேஞ்சிற்கு நிரூப்பும் அக்ஷராவும் மிக முக்கியமான விஷயங்களை உள்ளே இன்னமும் பேசிக் கொண்டிருக்க, “அய்யோ... வயத்த வலிக்குதே" என்று வெளியில் மக்கள் துடித்துக் கொண்டிருந்தார்கள். பிரியங்காவிற்கு உதவி செய்வதற்காக அவரின் டவலை கண்ணாடி இடைவெளியில் ராஜூ எடுக்க முயல, 'கொடுத்த‌வ‌னே ப‌றித்துக் கொண்டான்டி’ என்கிற கதையாக பிரியங்காவே அதை போட்டுக் கொடுக்க முயன்றது லாஜிக் இல்லாத நல்ல காமெடி.

 
தேசத்தலைவர்கள் ஒருவழியாக தங்களின் பேச்சு வார்த்தையை முடித்துக் கொண்டு வெளியே வந்தார்கள். “ரெண்டு ரெண்டு பேரா பாத்ரூமிற்குள்ள போயி ஜோலிய முடிங்கடா” என்று மக்களின் பிரச்னைக்கு எளிய தீர்வைச் சொன்னார் புதிய பி.ஏ. அக்ஷரா.

‘கப்பு முக்கியம் பிகிலு’ என்கிற தலைப்பில் வீட்டின் தலைவருக்கான போட்டி நடந்தது. ஏற்கெனவே இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சிபியும் ராஜூவும் இந்தப் போட்டியில் மோதுவார்கள். வீட்டிற்குள் ஒருவரின் மேல் ஒருவர் வார்த்தைகளால் சேறு அடித்துக் கொள்வது போதாதென்று உண்மையாகவே சேறு படுவது போன்ற போட்டியை பிக் பாஸ் ஏற்பாடு செய்திருந்தார்.

 
ஆக்டிவிட்டி ஏரியாவில் இதற்காக சேற்றுக்குழி அமைக்கப்பட்டு அதில் கால்பந்து போஸ்ட்டுகள் போல இரண்டு பக்கமும் வலை இருந்தது. சிபியும் ராஜூவும் மெகா சைஸ் பிளாஸ்டிக் பந்தை ஆவேசமாக எட்டி உதைக்க, சுற்றியிருந்தோர் அனைவரின் மீதும் சேறு பட்டதால் திருவிழா கூட்டத்தில் கழுதை புகுந்தது போல் அலறினார்கள். வெளியில் சென்று விழுந்த பந்தை அபினய் தன்னிச்சையாக உள்ளே தட்டி விட அந்தச் சந்தர்ப்பத்தை உபயோகித்த சிபி அதை கோல் ஆக்கினார். ராஜூ இதற்காக அபினய்யை கோபித்துக் கொண்டு உடனே சட்டென்று சமாதானம் ஆனது புத்திசாலித்தனம். "எனக்கு நிறைய கோபம் வரும். முகமூடி போட்டு மறைச்சிருக்கேன்” என்று முகமூடி டாஸ்க்கின் போது நேர்மையாக ஒப்புக் கொண்ட ராஜூ, தன் சாமர்த்தியத்தினால் ஜஸ்ட் எப்கேப் ஆனார். இல்லையென்றால் அபினய்யுடன் ஒரு பெரிய வாக்குவாதம் நடந்திருக்கும்.

ஆக... இரண்டாவது முறையாக சிபி தலைவர் ஆகும் வாய்ப்பு வந்தது. ஆனால் இப்போது ஒரு ட்விஸ்ட் நடந்தது. "யாராவது நாணயத்தை உபயோகிக்க விரும்புகிறீர்களா?” என்று பிக் பாஸ் கேட்ட போது அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வருண் முன்வந்தார். சிபிக்கு அதிர்ச்சி. ‘அடப்பாவி. சேத்துலலாம் விழுந்து புரண்டிருக்கேன். கொஞ்சம் கருணை காட்டுடா’ என்பது மாதிரி அவர் முகம் கெஞ்சியது. ஆனால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் சூழலில் வருண் இருக்கிறார். “வாரம் முழுவதும் பாத்ரூம் கழுவணும்... ஓகேவா?” என்று கூட பிக் பாஸ் மிரட்டிப் பார்த்தார். என்றாலும் வருண் தன் முடிவிலிருந்து மாறவில்லை.

 
வருணின் இந்த முடிவு சரியா? கடந்த வாரத்தில் நடந்த வாக்கெடுப்பில் அவர் கடைசி வரிசையில் இருந்தார். எனவே தாம் ‘ஜஸ்ட் எஸ்கேப்’ நிலையில் இருக்கிறோம் என்பது வருணிற்கு நன்றாகப் புரிந்திருக்கும். எனவே இந்த வாரத்தில் தலைவர் ஆவதின் மூலம் யாரும் தன்னை நாமினேட் செய்ய முடியாது என்கிற நிலையை ஏற்படுத்திவிட்டார். ஆனால் தலைவர் பொறுப்பை அவர் திறம்பட கையாண்டால்தான் போட்டியாளர்களிடமும் சரி, மக்களிடமும் சரி, நல்ல மதிப்பைப் பெற முடியும். வருணிற்கு அந்தத் திறமை இருக்கிறதா? பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஆனால் இன்னொரு கோணத்தில் வருண் அவசரப்பட்டு விட்டார் என்றுதான் தோன்றுகிறது. ‘நாமினேஷனில் தனது பெயர் வந்த பிறகு நாணயத்தின் சக்தியை அவர் உபயோகித்திருக்கலாம். “சிபி ஏற்கெனவே தலைவராக இருந்து விட்டார். என் பிரெண்டுதான். கோச்சுக்க மாட்டார்" என்றெல்லாம் பல சாக்குகளை வருண் சொன்னாலும் சிபியின் அடிமனதில் எரிச்சலும் ஏமாற்றமும் உறைந்தே இருக்கும் என்று தோன்றுகிறது. பாவம் வருண். அவருக்கும் பாத்ரூமிற்கும் என்ன ஜென்மாந்திர தொடர்போ, அது தொடர்பான வேலைகளே அவருக்குத் தொடர்ந்து கிடைக்கின்றன.

 
விதிமீறல்கள் செய்த பிரியங்காவை நடனம் ஆடச் சொல்வது, மதுமிதாவை குதிக்கச் சொல்வது என்று பல இம்சைகளைத் தந்து கொண்டிருந்தார் நிரூப். எனில் இசை கடந்த வாரத்தில் எத்தனை பிள்ளைப்பூச்சியாக இருந்திருக்கிறார் என்பதை இப்போதுதான் பிக் பாஸ் வீடு உணரும். குறிப்பாக இசை ‘சர்வாதிகாரி’ என்று வர்ணித்த இமான் அண்ணாச்சி இனிதான் இசையின் சகிப்புத்தன்மையை உணரப் போகிறார். “இசை சொன்ன போது யாருமே கேட்கலைல்ல” என்று பாவனியே பரிதாபப்படுகிற அளவிற்கு நிலைமை ஆகிவிட்டது. மறுபடியும் அதேதான். ஒரு பெண் தலைமை தாங்கினால் அதை ஏற்றுக் கொள்ள சமூகத்திற்கு மனத்தடைகள் இருக்கின்றன.

தலைவர் பதவியில் வருண் ட்விஸ்ட் தந்ததால், ‘நீ படிக்கற ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா’ என்பதுபோல் பிக் பாஸ் இப்போது யோசித்தார். வழக்கமாக போட்டியாளர்களை வெளியேற்றுவதற்காகத்தான் நாமினேஷன் நடக்கும். இந்த முறை ‘காப்பாற்றுவதற்காக’ நாமினேஷன் செய்யச் சொன்னார். தீபாவளி கொண்டாட்டத்தை ‘பாசிட்டிவ்’ மோடில் நடத்துகிறாராம்.

 
இந்தக் ‘காப்பாற்றுதல்’ நிகழ்ச்சியில் பலரும் தாமரை பாதுகாப்பு இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தினார்கள். ராஜூ சொன்ன மைலேஜூக்காக அல்லாமல் உண்மையிலேயே இவர்கள் தாமரையை காப்பாற்ற விரும்பினால் மகிழ்ச்சியே. சுருதி கூட தாமரைக்கு வாக்களித்தது நல்ல விஷயம். ஆனால் இது அவரது ‘டேமேஜ் கண்ட்ரோல்’ நடவடிக்கையின் ஒரு பகுதியா என்பது போலவே தோன்றுகிறது. ராஜூ, இமான் ஆகியோர்களின் பெயர்களும் ‘காப்பாற்றுதல்’ சடங்கில் நிறைய அடிபட்டன. அபினய், அக்ஷரா, சுருதி பெயர்கள் கூட ஒருமுறை வந்தது. ஆனால் சிபி மற்றும் வருண் பெயரை யாருமே சொல்லவில்லை.

இந்த வரிசையில் மதுமிதா சொன்ன காரணம் விநோதமாக இருந்தது. அவர் இந்த டாஸ்க்கை சரியாக புரிந்து கொண்டாரா என்று தெரியவில்லை. பிரியங்கா மற்றும் பாவனியை ‘காப்பாற்ற’ அவர் சொன்ன காரணங்கள் எதிர்மறையான தொனியில் இருந்தன. இதை பிக் பாஸ் கவனித்தாரா?

ஆக... போட்டியாளர்களால் ‘காப்பாற்றப்பட விரும்புவர்களில்’ அதிக வாக்குகள் பெற்றவர்களைத் தவிர்த்து மற்றவர்களின் பெயர்கள் எவிக்ஷன் பட்டியலில் அறிவிக்கப்பட்டன. அதன்படி இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள்: சிபி, இசை, மதுமிதா, ஐக்கி, சுருதி, நிரூப், அக்ஷரா, அபினய் மற்றும் பாவனி. நாணயம் வைத்திருந்தவர்களை மட்டும் அழைத்து "யாராவது பயன்படுத்துகிறீர்களா?” என்று பிக்பாஸ் அழைக்க எவரும் பயன்படுத்த விரும்பவில்லை. (அவ்வளவு நம்பிக்கை!).

 
‘சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ’ மாதிரி அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்த நிரூப், ஐந்து நபர்களை தேர்வு செய்து அவர்கள் அன்று இரவு பெட்ரூமில் படுக்கக்கூடாது என்று அக்ஷராவின் மூலம் அறிவித்தார். இமான், அபினய், மதுமிதா, பாவனி மற்றும் இசை ஆகிய ஐவரும் வரவேற்பறை சோபாவில்தான் படுக்க வேண்டும்.

நாணயம் திருடுவது பற்றிய சதித்திட்டங்களை வருணும் அக்ஷராவும் அன்றைய இரவில் விரிவாக அலசிக் கொண்டிருந்தனர். இதில் அக்ஷரா மிக ஆர்வமாக இருந்தார். பேருந்து நிலையத்தில் உறங்கிக் கொண்டிருப்பவர்களின் பைகளை ஆராயும் ஜேப்படி திருடர்களைப் போல சோபாவில் உறங்கிக் கொண்டிருந்த பாவனியின் உடையையும் படுக்கை அறையையும் அக்ஷரா நோட்டம் விட்டுக் கொண்டிருந்த காட்சியோடு எபிசோடு நிறைந்தது.

யாராவது காயினை சுட்டால்தான் பிக்பாஸில் இனி சுவாரஸ்யம் நிகழும். அந்தத் திருட்டு நடக்குமா? பிரார்த்தனை செய்து காத்திருப்போம்.
SHARE