Thursday 25 November 2021

இலங்கையில் அதிகரிக்கும் எரிவாயு சிலிண்டர் விபத்துக்கள் – லிட்ரோ நிறுவனம் விளக்கம்..!!!

SHARE

இலங்கை பன்னிப்பிட்டி-கொட்டாவ பிரதேசத்தில் வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

எரிவாயு சிலிண்டர் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கொட்டாவ பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற இந்த வெடிப்புச் சம்பவத்தினால் குறித்த வீடு பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

எவ்வாறாயினும், இந்த சம்பவத்தில் வீட்டில் வசிக்கும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மாதத்தில் மாத்திரம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பான 4 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

நவம்பர் 04 ஆம் திகதி வெலிகம கப்பரதொட்ட பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் மூவர் காயமடைந்தனர்.

இரத்தினபுரியில் உள்ள உணவகம் ஒன்றில் நவம்பர் 16 ஆம் திகதி, வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாகவும், விசாரணைகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்தமையே சம்பவத்திற்குக் காரணம் எனத் தெரியவந்திருந்தது.

கொழும்பில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள உணவகத்தில் நவம்பர் 20 ஆம் திகதி, எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் மூன்று பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

இதனையடுத்து எரிவாயு சிலிண்டர்களில் ஏதாவது பிரச்சினை இருக்கலாம் என மக்கள் சந்தேகம் எழுப்பினயுள்ளனர்.

எனினும் சமையல் லிட்ரோ எரிவாயுவில் எவ்வித பாதுகாப்புப் பிரச்சினையும் இல்லை என்று லிட்ரோ நிறுவனத்தின் விற்பனைப் பணிப்பாளர் ஜானக பதிரன தெரிவித்துள்ளார்.

லிட்ரோ எரிவாயுவில் பாதுகாப்புப் பிரச்சினைகள் நிலவுவதாக வெளியாகும் செய்தியில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தவறான செய்திகளைப் பரப்புவது அரசாங்கம் மற்றும் 6 மில்லியன் பாவனையாளர்களை சங்கடத்துக்கு உட்படுத்தும் என்று லிட்ரோ நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

தாம் சர்வதேச நியமங்களின் அடிப்படையில் 150 வருட காலமாக எரிவாயு விநியோகிப்பதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.
SHARE