Sunday 28 November 2021

‘ஜெயில்’ படத்துக்குத் தடை கோரி வழக்கு..!!!

SHARE


கிரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸ் நிறுவனம் ஜெயில் திரைப்படத்தின் காப்புரிமை, ஒடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை உள்ளிட்ட விநியோக உரிமைகளை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துக்கு வழங்கி அக்டோபர் மாதம் 24ஆம் தேதி ஒப்பந்தம் போடப்பட்டது. படத்தின் விநியோக உரிமையை தங்கள் நிறுவனம் பெற்றிருந்த நிலையில், திடீரென தயாரிப்பு நிறுவனம் தனது ஜெயில் படம் வரும் டிசம்பர் 9ஆம் தேதி வெளிவர உள்ளதாகவும், தமிழ்நாடு திரைப்பட விநியோக உரிமையை எஸ்.எஸ்.ஐ புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் அறிவித்துள்ளது. அது தவிர தயாரிப்பு நிறுவனம் ஜெயில் திரைப்படத்தின் சாட்டிலைட் மற்றும் ஒடிடி உரிமையையும் விற்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.

ஒட்டுமொத்த விநியோக உரிமையைத் தங்களுக்கு வழங்கி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது சட்ட விரோதமாகப் படத்தை வெளியிட முயற்சி நடப்பதால் அதற்குத் தடை விதிக்க வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு நேற்று முன்தினம் (நவம்பர் 26) விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து ஜெயில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கிரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸ் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 3ஆம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளார்.

பொதுவாக தமிழ் சினிமாவில் இரட்டை ஒப்பந்தங்கள், ஒப்பந்தம் கையெழுத்தான பின் ஒப்பந்த அடிப்படையில் பணம் கொடுக்காமல் இழுத்தடிப்பது போன்ற சம்பவங்கள் நிறைய உண்டு. 

ஜெயில் பட ஒப்பந்தத்தில் நடந்தது என்ன என்று விசாரித்தபோது, 

ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டது உண்மை. ஆனால், இரண்டு விஷயங்களில் ஸ்டூடியோ கிரீன் சொன்னபடி நடந்து கொள்ளவில்லை. ஒன்று, அந்த ஒப்பந்தப்படி படத்தின் விலை எட்டு கோடி ரூபாய். அதற்கு ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் போட்ட ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், ஒரு ரூபாய் கூட முன்பணம் தரவில்லையாம். ஒவ்வொரு உரிமையும் விற்பனை ஆகும்போது படிப்படியாகப் பணம் தருவதாகச் சொன்னார்களாம். இரண்டாவது, டிசம்பர் 9ஆம் தேதி படத்தை வெளியிட வேண்டும் என்று சொன்னதை முதலில் ஒப்புக்கொண்டு அதன்பின் 2022 ஜனவரி மாதம் பொங்கலின்போது வெளியிடலாம் என்று கூறியுள்ளார்கள். இவ்விரண்டு விஷயங்களும் ஜெயில் படத் தயாரிப்பாளருக்கு ஒத்துவராததால் எஸ்.எஸ்.ஐ நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுவிட்டார்களாம். அவர்கள் மூன்றரை கோடி முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் போட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதோடு டிசம்பர் 9ஆம் தேதி படம் வெளியாகும் என்றும் அறிவித்து விட்டார்கள். ஸ்டூடியோ கிரீன் தொடர்ந்துள்ள வழக்குக்கு உரிய பதிலை, உண்மையை நீதிமன்றத்தில் சொல்வோம் என்கின்றனர் தயாரிப்பு தரப்பில்.

SHARE