புத்தளம் முந்தல் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட மதுரங்குளி மல்லம்பிட்டி களப்பு பகுதியில் இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலமொன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த களப்பு பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக மீனவர் ஒருவர் கிராம உத்தியோகத்தர் ஊடக காவல்துறையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் முந்தல் காவல்துறையினரும், காவல்துறை தடயவியல் பிரிவினரும் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் 55 வயது மதிக்கத்தக்கவர் எனவும் வெள்ளை நிற சேர்ட் மற்றும் சாரம் அணிந்திருந்த நிலையில் காணப்பட்டதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
எனினும் சடலமாக மீட்கப்பட்டவர் யார் என்பது தொடர்பில் இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனவும் முந்தல் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, முந்தல் காவல்துறை பிரிவில் 25 வயது இளைஞர் மாத்திரமே காணாமல் போனமை தொடர்பில் முறைப்பாடு உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், 50 வயதுக்கு மேற்பட்டோர் காணாமல் போனவர்கள் தொடர்பில் ஏதும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளனவா என்பது பற்றி உடப்பு மற்றும் புத்தளம் ஆகிய காவல் நிலையங்களுக்கும் தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு களப்பு பகுதியில் உள்ள குறித்த சடலத்தை நீதிவான் விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு சொல்லப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் முந்தல் காவல் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.மௌசின் தலைமையிலான காவல்துறை குழுவினரும், உப காவல்துறை பரிசோதகர் ஜயந்த, காவல்துறை கொஸ்தபல் அசங்க (70846), காவல்துறை கொஸ்தாபல் நிசாந்த (72141) உள்ளிட்ட தடயவியல் காவல்துறையினருன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்