Friday 3 December 2021

40 மடங்கு சம்பள உயர்வு பெற்ற கிரிக்கெட் வீரர்

SHARE

 


ஐபிஎல் 2022 போட்டிக்காக கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியில் ஆண்ட்ரே ரஸ்ஸல் (ரூ. 12 கோடி - அணியின் நிதியிலிருந்து ரூ. 16 கோடி எடுக்கப்படும்), வருண் சக்ரவா்த்தி (ரூ. 8 கோடி - அணியின் நிதியிலிருந்து ரூ. 12 கோடி எடுக்கப்படும்), வெங்கடேஷ் ஐயா் (ரூ. 8 கோடி), சுனில் நரைன் (ரூ. 6 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள்.


இவர்களில் வெங்கடேஷ் ஐயர், ரூ. 8 கோடிக்குத் தக்கவைக்கப்பட்டுள்ளது பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய வெங்கடேஷ் ஐயர், 10 ஆட்டங்களில் 4 அரை சதங்களுடன் 370 ஓட்டங்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் - 128.47. கிட்டத்தட்ட 9 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளும் எடுத்தார். இந்தூரில் வசிக்கும் 26 வயது வெங்கடேஷ் ஐயர், தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

ஐபிஎல் போட்டியில் மட்டுமல்லாமல் சையத் முஷ்டாக் அலி போட்டியிலும் நன்றாக விளையாடி அனைவர் கவனத்தையும் ஈர்த்ததால் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்குத் தேர்வானார் வெங்கடேஷ் ஐயர். டி20 தொடரில் 3 டி20 ஆட்டங்களிலும் விளையாடினார்.

இந்நிலையில் வெங்கடேஷ் ஐயர், ரூ. 8 கோடிக்குத் தக்கவைக்கப்பட்டிருப்பதால் தற்போது தக்கவைக்கப்பட்ட வீரர்களில் அதிக மடங்கு சம்பள உயர்வு பெற்ற வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.

2021 ஐபிஎல் ஏலத்தில் ரூ. 20 லட்சத்துக்கு கொல்கத்தா அணி தேர்வு செய்தது. இப்போது 40 மடங்கு சம்பள உயர்வு. இதற்கு அடுத்த இடத்தில் சிஎஸ்கேவின் ருதுராஜ். 30 மடங்கு சம்பள உயர்வுடன் ரூ. 6 கோடிக்குத் தக்கவைக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டியில் இதுதான் அதிக அளவில் பெற்ற சம்பள உயர்வா? இல்லை.

2015 இல் ரூ. 10 லட்சத்துக்கு பாண்டியாவைத் தேர்வு செய்தது மும்பை அணி. 2018 இல் பாண்டியாவை ரூ. 11 கோடிக்குத் தக்கவைத்துக் கொண்டது. அதாவது 110 மடங்கு சம்பள உயர்வு!
SHARE