பெற்றோல், டீசலின் விலைகள் 400 ரூபாயைத் தாண்டியது..!!!


நாட்டில் அனைத்து வகையான எரிபொருளும் 400 ரூபாயைத் தாண்டியது.

இன்று (24) அதிகாலை 3 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை மீண்டும் ஒருமுறை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக அனைத்து வகையான எரிபொருள்களும் 400 ரூபாயைக் கடந்துள்ளது.

இதன்படி 92 ஒக்ரைன் பெற்றோல் லீற்றர் 82 ரூபாயினால் அதிகரித்து 420 ரூபாயாகவும், 95 ஒக்ரைன் பெற்றோல் லீற்றர் 77 ரூபாயினால் அதிகரித்து 450 ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு லீற்றர் ஓட்டோ டீசல் 111 ரூபாயினால் அதிகரித்து 400 ரூபாயாகவும், சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 116 ரூபாய் அதிகரித்து 445 ரூபாயாகவும் உள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலை அதிகரிப்பை அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

எரிபொருள் விலை சூத்திரம் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டதாகவும், இவ்வாறு விலைகளை உயர்த்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

இறக்குமதி, இறக்குதல், வரி உள்பட நிரப்பு நிலையங்களுக்கு விநியோகம் செய்யும் போது ஏற்படும் அனைத்து செலவுகளும் இந்த விலைத் திருத்தத்தில் உள்ளடங்குவதாகத் தெரிவித்த அமைச்சர் விஜேசேகர, இலாபங்கள் கணக்கிடப்படவில்லை அல்லது உள்ளடக்கப்படவில்லை என்றும் கூறினார்.

இதேவேளை, போக்குவரத்து மற்றும் இதர சேவைக் கட்டணங்களை திருத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.

இந்த சூத்திரம் பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை அல்லது மாதந்தோறும் பயன்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், கட்டணத் திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுமாறு போக்குவரத்துத் துறையிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்ததுடன், 2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்தினார்.

மேலும், நிறுவனங்களின் தலைவரின் வழிகாட்டுதலின் பேரில் இன்று (24) முதல் அரச துறை ஊழியர்கள் கடமைக்கு அழைக்கப்படுவார்கள் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

எரிபொருளைப் பயன்படுத்துவதைக் குறைக்கவும், எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கவும் வீட்டிலிருந்து வேலை செய்வது ஊக்குவிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.


Previous Post Next Post


Put your ad code here