கடும் நெருக்கடிக்கு மத்தியில் பாராளுமன்றம் கூடுகிறது..!!!




கடும் பொருளாதார நிதி நெருக்கடிக்கு மத்தியில், இலங்கை பாராளுமன்றம் புதன்கிழமை கூடுகிறது.

அன்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படக் கூடும் என கூறப்படுகிறது.

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் அத்தியாவசிய பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசி உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதை அடுத்து, பிரதமரை தவிா்த்து அனைத்து அமைச்சா்களும் ராஜிநாமா செய்தனா். அவரது குடும்பத்தைச் சோ்ந்த மூன்று அமைச்சா்களும் பதவி விலகினா்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என போர் கொடி தூக்கியுள்ள அந்நாட்டு மக்கள், தொடர்ந்து போராடங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைக்க ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை எதிா்க்கட்சிகள் நிராகரித்தன. அதன்பின்னா், 17 புதிய அமைச்சா்களை ஜனாதிபதி நியமித்தாா். அதிலும் ராஜபக்ஷ குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு இடமளிக்கப்படவில்லை.

எனினும், பிரதமா் மஹிந்த ராஜபக்ஷவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டன. பதவி விலக போவதில்லை என்ற முடிவில் திட்டவட்டமாக இருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையில் அனைத்து எதிா்க்கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசை அமைப்பதற்கான பலத்தை நிரூபிக்க எதிா்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளாா். இதனால், இலங்கை அரசியலில் கடும் குழப்பம் நீடித்து வந்தது.

இந்நிலையில், சுமாா் ஒரு மாதமாக நடைபெற்று வரும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், சொந்தக் கட்சியில் உள்ள அதிருப்தி தலைவா்களுடனும், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா தலைமையிலான இலங்கை சுதந்திர கட்சியின் நிா்வாகிகளுடனும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெள்ளிக்கிழமை தனித்தனியாக ஆலோசனை நடத்தினாா். அப்போது பிரதமா் மஹிந்தவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா்.

இதனிடையே, இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, கடந்த 30 ஆம் திகதி தனது பதவியை ராஜிநாமா செய்ததை தொடர்ந்து புதிய சபாநாயகரை தேர்வு செய்ய நாளை மறு நாள் புதன்கிழமை இலங்கையில் பாராளுமன்றம் கூடுகிறது.

மேலும் அன்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாக பிரதான எதிா்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் மக்கள் போராட்டங்களுக்கும் மத்தியில் இலங்கையில் பாராளுமன்றம் கூட உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை சுதந்திரத்திற்குப் பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது, உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு மற்றும் மின் வெட்டு போன்றவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்நியச் செலாவணியின் கடுமையான பற்றாக்குறையின் காரணமாக, இலங்கை சமீபத்தில் சுமார் 51 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here