தமிழக உறவுகளின் நிவாரண பொதி யாழை வந்தடைந்தது..!!!


யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கான தமிழக நிவாரணப் பொருட்கள் இன்று ரயிலில் யாழ்ப்பாணம் எடுத்து வரப்படுவரப்பட்டு உடனடியாகவே விநியோகம் இடம்பெறுகின்றன.

இந்தியாவின் தமிழ்நாடு முதலமைச்சரால் அனபளிப்புச் செய்யப்பட்ட பொருள்கள் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட ரயில் மூலம் இன்று அதிகாலை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தன.

யாழ்ப்பாணத்திற்கு அனுமதிக்கப்பட்ட பொருட் களில் 40 வீதமானவற்றை இந்த ரயிலில் ஏற்றக்கூடிய வசதிகள் காணப்பட்டமையினால் யாழிற்கு அனுமதிக்கப்பட்ட 20 ஆயிரம் அரிசி மூடைகளில் 8 ஆயிரத்து 755 மூடைகளும், 500 பைக்கற் பால் மாவும் மட்டுமே தற்போது எடுத்து வரப்பட்டன.

இவ்வாறு எடுத்து வரப்பட்ட பொருள்களில் மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவுக்குரியவை பளை ரயில் நிலையத்திலும், சாவகச்சேரி, பருத்தித்துறை, கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவுகளுக்குரியவை சாவகச்சேரி ரயில் நிலையத்திலும் இறக்கப்பட்டது. அதேநேரம் எஞ்சியவை யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் வைத்து யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜினால் மாவட்டச் செயலாளரிடம் கையளிக்க மாவட்டச் செயலாளர் பிரதேச செயலாளர்களிடம் கையளித்தார்.

இந்தப் பொருட்களில் வேலணை பிரதேச செயலகப் பிரிவில் 3,000 குடும்பங்களுக்கும், ஊர்காவற்றுறை பிரதேச செயலகப் பிரிவில் 2,750 குடும்பங்களுக்கும், காரைநகர் பிரதேச செயலகப் பிரிவில் 2,500 குடும்பங்களுக்கும் நெடுந்தீவுப் பிரதேச செயலகப் பிரிவில் 1,200 குடும்பங்களுக்கும், மருதங்கேணி செயலகப் பிரிவில் 3,750 குடும்பங்களுக்கும் அனுமதிக்கப்பட்ட அளவு முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.

கொண்டு வரப்பட்ட பொருட்கள் புகையிரத நிலையத்தில் வைத்து உடனடியாக பயணாளிகளிற்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

படங்கள் – ஐ.சிவசாந்தன்








Previous Post Next Post


Put your ad code here