
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள பொலிஸ் காவலரண் பகுதியில் வியாழக்கிழமை (5) இரவு 11 .30 மணியளவில் ஏற்பட்ட சம்பவம் ஒன்றின் காரணமாக காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை மற்றும் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் விசாரணைகளை மனித உரிமை ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.
இதற்கமைய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தலைமையிலான குழு நேற்று (6) சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பிடம் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டனர்.
மேலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் தலைமையிலான குழுவினர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பொலிஸார் மற்றும் பொதுமக்களிடம் இவ்விடயம் சம்பந்தமாக விசாரணைகளை ஆரம்பித்து வாக்குமூலங்களை பெற்றுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் பதற்றம் ஏற்பட காரணம் சம்பவ இடத்தில் பொலிஸாரினால் நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் இறந்துவிட்டதாக அங்கு நின்றவர்கள் கூறிய வதந்தியே கலவரமாக மாறுவதற்கு வழியேற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர குறித்த சோதனை சாவடி தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகளும் ஏற்கனவே வெளியாகியுள்ளதாக தற்போதைய விசாரணைகளில் இருந்து வெளியாகியுள்ளது.
சம்பவ தினமன்று குறித்த சோதனை சாவடியை தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர்கள் மோதியதாகவும் அதனால் ஏற்பட்ட விசாரணையின் போது பதற்றம் ஏற்பட்டதாக பொலிஸ் தரப்பினர் குறிப்பிட்டுள்ளதுடன் பொதுமக்கள் பொலிசாரின் அறிக்கை உண்மைக்கு புறம்பானது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சம்பவம் தொடர்பில் பூர்வாங்க விசாரணை அறிக்கையை உடனடியாக அனுப்புமாறு அக்கரைப்பற்று பொலிஸாரிடம் மனித உரிமை ஆணைக்குழு கேட்டுள்ளது.
Tags:
sri lanka news