Wednesday 11 May 2022

புதிய மகசின் சிறைச்சாலையில் பரவும் வைரஸ் காய்ச்சலால் தமிழ் அரசியல் கைதிகள் பாதிப்பு - முருகையா கோமகன்..!!!

SHARE

புதிய மகசின் சிறைச்சாலையில் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் தமிழ் அரசியல் கைதிகள் பலரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற இன்றைய ஊடக சந்திப்பிலேயே முருகையா கோமகன் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிப்பை உணர ஆரம்பித்துள்ளனர்.

புதிய மகசின் சிறைச்சாலையில் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் தமிழ் அரசியல் கைதிகள் பலரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

சிகிச்சை பெறுவதற்கான மருந்துகள் கூட பெரும் தட்டுப்பாடாக உள்ளது. மேலும் தற்போது சாதாரணமான பனடோலைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றது. அரசியல் கைதிகளின் உறவினர்கள் இதனை எமக்கு தெரியப்படுத்தி கவலைப்பட்டனர்.

இது தொடர்பாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம், அரசாங்கம் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் கருத்திற்கொண்டு உதவி செய்ய முயற்சிக்க வேண்டும்.

அரசியல் கைதிகள் பலரும் தொற்றா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியாக இவ்வாறான நோய்களினாலும் மருத்துவ ரீதியாக புறக்கணிக்கப்படுகின்ற நிலையும் காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட தரப்புகள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டை சூறையாடி பொருளாதாரத்தை நலிவடையச் செய்த நபர்கள் தப்பியோடக்கூடிய சூழலில் சாதாரண குற்றம் செய்ததற்காக 10 தொடக்கம் 26 வருடங்கள் வரை தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர். உடனடியாக அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றார்.
SHARE