Sunday 5 June 2022

விஜய்யுடன் மீண்டும் இணையும் சமந்தா?

SHARE

லோகேஷ் அடுத்து விஜய்யுடன் இணையும் படத்தில் மீண்டும் சமந்தா நாயகியாக இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் 'விக்ரம்'. திரையரங்குகளில் வெளியாகி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் லோகேஷின் அடுத்த படம் குறித்தான எதிர்ப்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. 'விக்ரம்' படம் வெளியாவதற்கு முன்பே லோகேஷ் மீண்டும் நடிகர் விஜய்யுடன் இணைகிறார் என்ற பேச்சு இருந்த நிலையில், சமீபத்தில் ஒரு விருது மேடையிலும் அதை லோகேஷ் கனகராஜ் உறுதிப்படுத்தினார்.

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தனது 66வது படத்தில் நடித்து வருகிறார். படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் முடிவடைந்த நிலையில் மீண்டும் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் சீக்கிரம் தொடங்க உள்ளது. இதற்கடுத்து தான் லோகேஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் தான் சமந்தா கதாநாயகியாக மீண்டும் விஜய்யுடன் நடிக்க உள்ளார். ஏற்கனவே சமந்தா விஜய்யுடன் 'தெறி', 'மெர்சல்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த செய்தி உறுதியானால் சமந்தா விஜய்யுடன் இணைந்து நடிக்கும் மூன்றாவது படமாக இது இருக்கும்.

'விக்ரம்' படம் வெளியானதுக்கு பின்பு அடுத்த ஒரு வாரத்தில் தனது அடுத்த படம் குறித்தான அறிவிப்பு வெளியாகும் என லோகேஷ் முன்பு சொல்லி இருந்தார். அதனால், அடுத்த வாரத்தில் இந்த செய்தியும் உறுதிப்படுத்தப்படும் என எதிர்ப்பார்க்கலாம்.
SHARE