Monday 26 September 2022

மீண்டும் வெற்றி வாகை சூடிய இந்திய அணி!

SHARE


 இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதி சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியானது இந்தியாவின் ஹைதராபாத் மைதானத்தில்  இடம்பெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 186 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது

அவுஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேமரூன் கிரீன், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் களமிறங்கினர். பிஞ்ச் 7 ஓட்டங்களில் வெளியேற அடுத்த வந்த ஸ்டீவன் சுமித் 9, மேக்ஸ்வெல் 6 ஆகியோரும் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

அதிரடியாக விளையாடிய கேமரூன் கிரீன் 21 பந்துகளில் 52 ஓட்டங்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.கடைசி கட்டத்தில் களமிறங்கிய டேனியல் சாம்ஸ், டிம் டேவிட் ஜோடி இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். எனினும் டிம் டேவிட் 27 பந்துகளில் 54 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.

இதன்படி,நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ஓட்டங்களை அவுஸ்திரேலிய அணி குவித்தது.இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அக்சர் படேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல் (1) மற்றும் ரோகித் சர்மா (17) ஓட்டங்களில் ஆட்டமிழந்தாலும் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் இணை அதிரடியாக விளையாடியது.ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை திணறடித்த சூர்யகுமார் 36 பந்துகளில் 69 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார்.

பின்னர், மறுமுனையில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 63 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததும் கடைசி 5 பந்துகளில் இந்திய அணி வெற்றிபெற 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது.இறுதியாக ஒரு பந்து மீதமிருக்க ஹர்த்திக் பாண்டியா நான்கு ஓட்டங்களை பெற்று இந்திய அணியை வெற்றிபெறச் செய்தார்.

பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணியை வென்றது. 

SHARE