கோப்பாய் பொலிஸ் பிரிவில் உயிர்க்கொல்லி போதைப்பொருள் வியாபாரிகள் ஐவர் நேற்று வெள்ளிக்கிழமை வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயிர்க்கொல்லி போதைப்பொருள்களான ஹெரோயின், ஐஸ் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐவரும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகதவர்கள் என்பதுடன் வியாபாரிகள் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த கைது நடவடிக்கையை கோப்பாய் பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்தனர்.
கோப்பாய் செல்வபுரம் பகுதியில் 4 கிராம் 200 மில்லிக்கிராமுடம் அதே இடத்தைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அத்துடன் ஊரெழு முருகன் கோவிலடியைச் சேர்ந்த நான்கு வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் 26 வயதுடைய ஒருவரிடம் 2 கிராம் 300 மில்லிக்கிராம் ஹெரோயின், மற்றொருவரிடம் 96 போதை மாத்திரைகள், ஏனைய இருவரும் 15 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.
“சந்தேக நபர்கள் ஐவரும் தினமும் போதைப்பொருள் வியாபாரத்தினால் இலட்சம் ரூபாய் பணம் சம்பாதிப்பவர்கள் எனவும், தம்முடன் "டீல்" பேசி தம்மை விடுவிக்க கோரினார்கள்” என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் ஐவரும் நாளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.