Friday 25 November 2022

தாயகம் திரும்ப மறுப்பு தெரிவித்து உயிர்மாய்க்க முயற்சித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!!!

SHARE

தாயகம் திரும்ப மறுப்பு தெரிவித்து வியட்நாமில் உயிர்மாய்க்க முயன்ற குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த, நான்கு பிள்ளைகளின் தந்தையான சுந்தரலிங்கம் கிரிதரன் (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் கனடா செல்வதற்காக, 303 பேர், இலங்கையிலிருந்து உரிய விசா நடைமுறைகளை பின்பற்றி, விமானத்தின் மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மியான்மர் நோக்கி சென்றனர்.

சில மாதங்களாக மியான்மரில் தங்கியிருந்தவர்கள், அங்கிருந்து கப்பல் மூலம் கனடா நோக்கி செல்ல முற்பட்டுள்ளனர்.

அந்த கப்பல் சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை அண்மித்த கடல் பரப்பில் மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கியதாக, கடந்த 6ஆம் தேதி இலங்கை கடற்படை மீட்பு மையத்திற்கு தகவலொன்று கிடைத்திருந்தது.

இந்த தகவலை, இலங்கை கடற்படை சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு பகிர்ந்த நிலையில், சிங்கப்பூர் கடற்படைக்கு குறித்த கப்பல் தொடர்பில் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அருகாமையில் பயணித்த ஜப்பான் சரக்கு கப்பலின் உதவியுடன், இந்த அகதிகள் மீட்கப்பட்டு, வியட்நாமிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

வியட்நாம் முகாமில் உள்ள அகதிகளில் பலர், தாம் மீண்டும் தாய்நாட்டுக்கு திரும்ப விரும்பவில்லை எனவும், அவ்வாறு அதற்கு முயற்சித்தால் தற்கொலை செய்து கொள்வோம் என்றும் வியட்நாமிய அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார்கள்.

எனினும், குறித்த அகதிகளை மீள இலங்கைக்கு அனுப்பும் முயற்சிகள் இடம்பெற்று வந்த நிலையிலேயே, இரண்டு அகதிகள் கடந்த 18ம் தேதி தமது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் ,அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனை இலங்கை வெளிவிவாகர அமைச்சு நேற்றைய தினம் வியாழக்கிழமை கிரிதரனின் உறவினர்களுக்கு அறிவித்துள்ளனர்.

அதேவேளை கிரிதரனின் பூதவுடலை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு 28 இலட்ச ரூபாய் பணம் கோரப்பட்டதாகவும் , அது தொடர்பில் அதிகாரிகளுடன் தொடர்புகளை மேற்கொண்டு பூதவுடலை இலங்கை கொண்டு வருவதற்கு தாம் முயற்சித்து வருவதாகவும் , அதற்காக தமக்கு உதவுமாறும் கிரிதரனின் உறவினர்கள் கோரியுள்ளனர்.


SHARE