அடுத்தடுத்து திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டர் சைக்கிள்கள்..!!!


வவுனியாவில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டர் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

வவுனியா நகரப் பகுதியில் நேற்று இரவு (31.12) நடைபெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகரப் பகுதியில் இருந்து ஏ9 வீதியூடாக பயணித்த மோட்டர் சைக்கிள் ஒன்று நீதிமன்றத்திற்கு முன்பாக சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

உடனடியாக அதன் சாரதி கீழே குதித்துள்ளதுடன், வீதியால் சென்றவர்கள் மற்றும் அயலில் இருந்தவர்களின் துணையுடன் தண்ணீர் ஊற்றி தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். எனினும் மோட்டர் சைக்கிள் தீயில் எரிந்து பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இதேவேளை வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் திடீரென தீப்பற்றிய மோட்டர் சைக்கிள் ஒன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், மோட்டர் சைக்கிள் திருத்தும் நிலையம் மீது ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

புதுவருட தினமான இன்று (01.01) இடம்பெற்ற இவ் அனர்த்தம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிளசர் ரக மோட்டர் சைக்கிள் ஒன்று இயங்கவில்லை எனத் தெரிவித்து வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள மோட்டர் சைக்கிள் திருத்துமிடம் ஒன்றின் முன்பாக குறித்த மோட்டர் சைக்கிளை நிறுத்தி அதனை இயங்க செய்த போது அம் மோட்டர் சைக்கிள் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.

இதன்போது தீ பிடித்த மோட்டர் சைக்கிளில் இருந்து மோட்டர் சைக்கிள் திருத்தும் நிலையத்திற்கும் தீப் பிடித்த நிலையில் அங்கு நின்றவர்கள் அதனை கட்டுப்படுத்தியதுடன், தீப்பிடித்த மோட்டர் சைக்கிளை வீதியில் இழுத்துப் போட்டனர்.

அத்துடன் அங்கு நின்றவர்கள், வீதியால் சென்றவர்கள் இணைந்து நீர் ஊற்றியும், மண் போட்டும் மோட்டர் சைக்கிள் மீதான தீயை கட்டுப்படுத்த முயன்ற போதும் அது பயனளிக்கவில்லை. மோட்டர் சைக்கிள் முழுமையாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.


Previous Post Next Post


Put your ad code here