கொழும்பு - யாழ்ப்பாணம் ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது..!!!


ரயில் மார்க்கத்தில் முன்னெடுக்கப்படுகின்ற புனரமைப்பு பணிகள் காரணமாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை இன்று (05) முதல் ஐந்து மாதங்களுக்கு அநுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ரயில் மார்க்கத்தில் முன்னெடுக்கப்படவுள்ள புனரமைப்பு பணிகள் காரணமாக இன்று முதல் ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் W.A.D.S.குணசிங்க தெரிவித்தார்.

வடக்கு ரயில் மார்க்கத்தில் மஹவ முதல் ஓமந்தை வரையான பகுதியின் முதல் கட்ட புனரமைப்பு பணிகளுக்காக இன்று முதல் எதிர்வரும் ஐந்து மாதங்களுக்கு ரயில் சேவை மட்டுப்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.

அதன் பின்னர் இரண்டாம் கட்ட புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த ஐந்து ரயில்களில் நான்கு ரயில்கள் அநுராதபுரம் வரை சேவையில் ஈடுபடுகின்றன.

ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், பயணிகளின் நலன் கருதி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விசேட பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியாருடன் கலந்துரையாடி சுமார் 35 பஸ்கள் புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்தார்.

இன்று முதல் புதிதாக சேவையில் ஈடுபடுத்தப்படும் பஸ்களுக்கான ஆசன முன்பதிவு அவசியம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, வவுனியாவிலிருந்து அநுராதபுரம் ரயில் நிலையம் வரை விசேட பஸ் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் திட்டமிட்டு வருவதாகவும் தேசிய பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் கலாநிதி நிலான் மிரண்டா சுட்டிக்காட்டியுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here