Wednesday 25 January 2023

அதிகூடிய வரி செலுத்திய அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள்..!!!

SHARE

மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் மீது விதிக்கப்பட்ட அதிகூடிய வரியை அநேகமான அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் இன்று செலுத்த நேரிட்டது.

வரவு செலவுத் திட்டத்தின் மூலம் யோசனை முன்வைக்கப்பட்டு பின்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டு இறைவரி சட்டத் திருத்தத்திற்கு அமைய, 1 இலட்சம் ரூபாவிற்கு மேல் மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவு பெறும் அனைவரும் 6 வீதத்தில் இருந்து 36 வீதம் வரை வரியை செலுத்த வேண்டியுள்ளது.

2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமாகும் போது பணவீக்கம் எனப்படுகின்ற பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையேற்ற வேகம் 59.2 ஆக பதிவானது.

பணவீக்கம் அவ்வாறு கணக்கிடப்பட்டிருந்தாலும் நடைமுறை ரீதியில் உணவு, போக்குவரத்துக் கட்டணம், பிள்ளைகளின் கல்வி ஆகிய செலவீனங்கள் சுமார் 200 வீதத்தால் அதிகரித்துள்ளது.

இதற்கு உதாரணமாக 2022 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி 207 ரூபாவிற்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோலின் இன்றைய விலை 370 ரூபாவாக அமைந்துள்ளது.

130 ரூபாவிற்கு விற்கப்பட்ட ஒரு கிலோகிராம் சீனியின் இன்றைய விலை 209 ரூபாவாகும்.

160 ரூபாவிற்கு கொள்வனவு செய்த சம்பா அரிசி ஒரு கிலோகிராமை இன்று மக்கள் 210 ரூபாவிற்கும் மேல் கொடுத்து கொள்வனவு செய்ய நேரிட்டுள்ளது.

வங்கிகளின் வட்டி வீதமும் 30 வீதத்தை விட அதிகரித்துள்ளது.

ஏற்கனவே பெறப்பட்டிருந்த கடனுக்கான வட்டியையும் சில வங்கிகள் அண்மையில் அதிகரித்தன.

இதனை தவிர 3 வீத தேச நிர்மாண வரியையும் மக்கள் செலுத்துகின்றனர்.

கடந்த வருடம் ஜனவரி மாதம் 202 ரூபாவாக இருந்த டொலர் ஒன்றின் இன்றயை பெறுமதி 371 ரூபாவாகும்.

இதற்கு இணையாக வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற அனைத்து பொருட்களினதும் விலைகள் அதிகரித்துள்ளன.

மக்கள் இவ்வாறு பல அழுத்தங்களை சந்தித்துள்ள நிலையிலேயே ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவு பெறுவோரிடம் அரசாங்கம் உழைக்கும்போது செலுத்தும் வரியை அறவிடுகின்றது.
SHARE