பிலிப்பைன்ஸில் சுமார் 250 பேருடன் பயணித்த கப்பல் ஒன்றில் திடீரென தீ ஏற்பட்டதில், குறைந்தது 31 பேர் உயிரிழந்திருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
MV லேடி மேரி ஜோய் 3 (MV Lady Mary Joy 3) என்ற இந்த கப்பலில் நேற்று முன்தினம் புதன்கிழமை (29-03-2023) இரவு உள்ளூர் நேரப்படி 11 மணியளவில் தீ ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து சம்பவம் குறித்த கப்பல் ஜம்போங்கா மாகாணத்தில் இருந்து தென்மேற்கு திசையில் சுலு மாகாணத்தின் ஜோலோவிற்கு பயணித்தபோது இடம்பெற்றுள்ளது.
தீ ஏற்பட்டதையடுத்து, உயிர் தப்புவதற்காக நீரில் குதித்த சிலரும், தீக்காயங்களுக்கு உள்ளானவர்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 200 பேர் வரை மீட்கப்பட்டுள்ளதுடன், நீரில் தேடுதல் பணிகள் இடம்பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வளி சீராக்கி தொகுதியில் ஏற்பட்ட மின் ஒழுக்கின் காரணமாக கப்பலில் தீ பரவியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
Tags:
world news