நெடுந்தீவுக்கும், குறிகட்டுவானுக்கும் இடையிலான படகுச் சேவை மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு மாவிலித்துறை இறங்கு துறைக்கு அண்மையிலுள்ள வீடொன்றில் இன்று அதிகாலை மர்மமான முறையில் ஐந்து பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதையடுத்து, கடல்வழியாகக் கொலையாளிகள் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காகவே படகுச் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஊர்காவற்றுறை மாவட்ட நீதவான் எஸ். கஜநிதிபாலன் மற்றும் பொலீஸ் அதிகாரிகள், தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கடற்படையினரின் தீவிர கண்காணிப்புக்கு மத்தியில், நெடுந்தீவுக்கு உள்ளே வருவோரும், வெளிச் செல்வோரும் பதிவு செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படும் நடைமுறைக்கு மத்தியில் – கடற்படை முகாமுக்கு மிக அருகில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற இந்தக் கொலைச் சம்பவம் நெடுந்தீவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேநேரம் – வட மாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபரைத் தொடர்பு கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பவம் தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துமாறும், இக்கொலைகள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட்டு, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.