முல்லைத்தீவில் மரண கிரியைகள் செய்யும் ஐயர் வெட்டிக்கொலை..!!!



முல்லைத்தீவு, சிலாவத்தை பகுதியில் மரணக் கிரியைகள் மற்றும் அந்தியேட்டி கிரியைகள் செய்து வரும் 69 வயதுடைய அப்பாதுரை வேலாயுதம் எனப்படும் ஐயர் கொலை செய்யப்பட்டு, அவரிடம் இருந்த நகைகள் மற்றும் பணம் ஆகியன கொள்ளையிட்டுள்ளன.

இந்தச் சம்பவம், இன்று (28) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

வீட்டில் ஐயர், மனைவி மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகை தந்த உறவினர் என மூவரும் உறங்கிக் கொண்டிருந்த வேளை, கொள்ளையர்கள், வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து வீட்டுக்குள் நுழைந்து, ஐயரின் மனைவியையும் வயதான உறவினரையும் கை, கால்களை கட்டி, வாயும் கட்டி வைத்துவிட்டு, ஐயர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஐயர் விழுந்துள்ளார்.

வீட்டுக்குள் நுழைந்த இரு சந்தேகநபர்களும் முகத்துக்கு துண்டுகளை கட்டி, கையில் வாள், பொல்லுகள் கொண்டுவந்ததாக சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வயோதிபர் தெரிவித்தார்.

ஐயர் விழுந்த சந்தர்ப்பத்தில் வீட்டில் இருந்த ஐயரின் 15 பவுன் நகைகள் மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் பணம் (அண்ணளவாக) கொள்ளையர்கள் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்கள்.

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட மனைவி மற்றும் வயதான உறவினர் ஆகியோர் அதிகாலையில் பெரும் போராட்டத்துக்கு மத்தியில் அவற்றை அவிழ்த்து, வீட்டின் முற்றத்துக்கு வந்து பார்த்தபோது, ஐயர் நிலத்தில் குப்புற விழுந்த நிலையில் உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.

அச்சமடைந்த இருவரும் வீட்டிற்கு முன்னால் உள்ள கடைக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள். கடைக்காரர், பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வருகை தந்த முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் துப்பறியப்பட்டுள்ளன.

இதன்போது வீட்டிலிருந்த ஐயரின் மனைவி மற்றும் மனைவியின் உறவினரான ஒருவரும் பொலிஸாரின் விசாரணைக்குள் உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரியும் நேரில் வந்து பார்வையிட்டுள்ளனார்.

அத்துடன், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா பார்வையிட்டு விசாரணைகள் மேற்கொண்டுள்ளார்.

ஐயரின் உடலை, மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி பிரோத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் முல்லைத்தீவு பொலிஸாரை அவர் பணித்துள்ளார்.

இந்தக் கொலை மற்றும் கொள்ளை சம்பவம், முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here