நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா ஓகஸ்ட் 21 ஆரம்பம்; முன்னேற்பாடு தொடர்பாக கலந்துரையாடல்..!!!


வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா ஓகஸ்ட் 21ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதனுடைய ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக யாழ் மாநகர சபையினால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று வெள்ளிக்கிழமை (21) காலை 10 மணிக்கு யாழ் மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது.
யாழ் மாநகர சபை ஆணையாளர் இ.த.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் பல்வேறு தீர்மானங்கள் எட்டப்பட்டது.

குறித்த தீர்மானங்களின் படி,
ஓகஸ்ட் 20ஆம் திகதி மதியத்தில் இருந்து நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் வழமைபோல் போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டு செப்டம்பர் 16ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னர் நள்ளிரவே திறந்து விடப்படும். வர்த்தக நடவடிக்கைகளுக்காக குறித்த நேரத்தில் வாகனங்கள் உட்செல்ல அனுமதிக்கப்படும். வழமை போல் ஆலய சூழலில் வசிப்பவர்கள் வர்த்தகர்களுக்கான பாஸ் யாழ் மாநகர சபையால் வழங்கப்படும்.

ஆலய வெளி வீதியைச் சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் மாநகர சபையின் நீர் விநியோக வண்டி மற்றும் கழிவகற்றும் வண்டிகளைத் தவிர எக்காரணம் கொண்டும் வேறு வாகனங்கள் உட் செல்ல அனுமதிக்கப்படாது. அதேபோல சிவப்பு வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் எந்தவிதமான வியாபார, விளம்பர நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியாது. ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி திருவிழா நாட்களில் காணொளி பதிவு செய்வது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
காலணிகளுடன் ஆலய சுற்று வீதியில் நடமாடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

ஆலயத்துக்கு நேர்த்திக்கடன்களைக் நிறைவேற்ற வருகின்ற தூக்குகாவடிகள் அனைத்தும் ஆலயத்தின் முன்பக்க பருத்தித்துறை வீதி வழியாக மட்டுமே உள்நுழைய முடியும். அவ்வாறு வருகின்ற காவடிகள் சிறீ முருகன் தண்ணீர்ப் பந்தலின் முன் இறக்கப்பட்டதும், தூக்குகாவடி வாகனங்கள் அனைத்தும், செட்டித்தெரு வீதி வழியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் வழமைபோல் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ் மாநகர சபைக்கு முன்பாக உள்ள நல்லூர் குறுக்கு வீதியால் பயணித்து நாவலர் வீதியூடக ஆனைப்பந்தி சந்தியை அடைந்து யாழ் நகரை அடைய முடியும். யாழ் நகரில் இருந்து திரும்பும் வாகனனங்கள் அதே பாதையூடாக பருத்தித்துறை வீதியை அடையும். ஆனால் இறுதி விசேட திருவிழாக்களின் போது வழமைபோல் கச்சேரி நல்லூர் வீதியூடாக நாவலர் வீதியை அடைந்து பயணிக்க முடியும் - என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் நல்லூர் கந்தசுவாமி ஆலய பிரதிநிதிகள், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரது பிரதிநிதி, யாழ் மாநகர சபை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகள், நல்லூர் பிரதேச செயலக பிரதிநிதிகள்,ஆலய சூழலில் உள்ள மடங்கள் பந்தல்களின் பிரதிநிதிகள், சாரணர் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் சென் ஜோன்ஸ் முதலுதவி பிரிவுகளின் பொறுப்பாளர்கள், எனப்பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here