பாடசாலையில் கல்வி கற்கும் காலம் ஒரு வருடம் குறைகிறது..!!!



பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13இல் இருந்து 12ஆகக் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில், சபை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 2023ஆம் ஆண்டில் கல்வியமைச்சின் வரவு - செலவுத்திட்ட ஒதுக்கீட்டின் முன்னேற்றங்கள் மற்றும் 2024ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளன.

இதன்போதே, உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பாக பாடசாலையில் கல்வி கற்கும் காலத்தை ஒரு வருடம் குறைக்க எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கல்வி மறுசீரமைப்பு மூலம், ஒவ்வொரு மாணவர்களும் 17 வயதில் பாடசாலைக் காலத்தை முடிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அதாவது, 4 வயதில் முன்பள்ளியும், ஆரம்பப் பிரிவு 1 முதல் 5ஆம் தரம் வரையிலும், கனிஷ்ட பிரிவு தரம் 6 முதல் தரம் 8 வரையிலும், சிரேஷ்ட பிரிவு தரம் 9 முதல் தரம் 12 வரையிலும் வகைப்படுத்தப்படவிருப்பதாக கல்வி அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், 10ஆம் ஆண்டில் சாதாரணதரப் பரீட்சையையும், 12ஆம் ஆண்டில் உயர்தரப் பரீட்சையையும் நடத்த கல்வியமைச்சு முன்மொழிந்துள்ளது.

மேலும், சாதாரணதரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை 9இல் இருந்து 7ஆக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here