வேறு கட்சியின் தூண்டுதலிலையே எமது வேட்பாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர் - சட்டத்தரணி வி. மணிவண்ணன்..!!!


எமது பிரச்சார நடவடிக்கைகளை முடக்கும் முகமாகவே வேட்பாளரையும் , ஆதரவாளர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளதாகவும், அதொரு அடிப்படை உரிமையை மீறும் செயல் என தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தில் யாழ் , தேர்தல் மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் வரதராஜன் பார்த்திபன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைதினை கண்டித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மணிவண்ணன் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

பருத்தித்துறை நகர் பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியினர் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். எமது பிரச்சார அணியினர் வேட்பாளர் வரதராஜன் பார்த்திபன் தலைமையில் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்

அவ்வேளை பருத்தித்துறை பொலிஸாரினால் வரதராஜன் பார்த்திபனும் அவரது அணியினரும் அடாத்தாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு எமது ஆதரவாளர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளமை எமது பிரச்சார நடவடிக்கைகளை முடக்கும் நடவடிக்கையாக அமைந்துள்ளது.

எமது பிரச்சார நடவடிக்கையை குழம்புமாறு வேறு கட்சியினர் பருத்தித்துறை பொலிஸாருக்கும் கூறியமையால் தான் பொலிஸார் எமது ஆதரவாளர்களை கைது செய்துள்ளனர் என்ற சந்தேகம் எமக்கு உண்டு.

பொலிசாரின் இந்த செயலானது மிக திட்டமிட்ட செயலாகவே நாங்கள் பார்க்கின்றோம். இது எங்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயற்பாடாகும். என மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post


Put your ad code here