தமிழக வெற்றி கழக மாநாடு - வெற்றிக் கொள்கை திருவிழா..!!!


தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் - தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை ஒன்றி தொடங்கினார். அக்கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டி எனும் பகுதியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி. சாலை எனும் கிராமத்தில் வெற்றி கொள்கை திருவிழா எனும் பெயரில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது.

மாநாடு மாலை நான்கு மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொண்டர்கள் காலை 7:00 மணியில் இருந்து மாநாட்டு திடலில் திரண்ட ஆரம்பித்தனர். மதியம் ஒரு மணிக்குள் லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால் அவர்களின் பாதுகாப்பு கருதி, மாநாடு மூன்று மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. தமிழர்களின் பாரம்பரிய கலைகளான - கலை வடிவங்களான பறை இசை, ஒயிலாட்டம் ,மயிலாட்டம் ஆகியவற்றுடன் மாநாடு தொடங்கியது.

ஐந்து லட்சம் தொண்டர்கள் திரள்வார்கள் என எதிர்பார்த்து இருந்த நிலையில் எட்டு இலட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் திரண்டனர்.‌ மாநாடு நடைபெற்ற விக்கிரவாண்டி வி.சாலையிலிருந்து விழுப்புரம் வரை ஏறத்தாழ ஆறு கி. மீ. அளவிற்கு நெடுஞ்சாலை முழுவதும் தொண்டர்கள் ஆக்கிரமித்திருந்தனர்.‌

மக்களுக்கான அரசியல் முன்னிலைப்படுத்துவோம் என கூறி தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் மாநாட்டு திடலில் இந்திய சுதந்திரத்திற்காக போராடிய தமிழகத்தை சார்ந்த தியாகிகள்- அவர்களின் கட் அட்டுகள் இடம் பிடித்திருந்தன.

அத்துடன் அண்ணல் அம்பேத்கர் - தந்தை பெரியார் - பெருந்தலைவர் காமராஜர் - வீரமங்கை வேலு நாச்சியார்- சமூக நீதி வீராங்கனை அஞ்சலை அம்மாள் ஆகிய ஐந்து தலைவர்களின் கட் அவுட்களும் இடம் பிடித்திருந்தன. இந்த ஐவரும் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைக்கான தலைவர்கள் என அக்கட்சியின் தலைவரான விஜய் அறிவித்தார்.

திட்டமிட்டபடி மாநாட்டு திடலுக்கு நடிகர் விஜய் நான்கு மணி அளவில் வருகை தந்தார். மாநில நிர்வாகிகளுக்கும், மாவட்ட அளவிலான நிர்வாகிகளுக்கும் வணக்கம் தெரிவித்த அவர் தொடர்ந்து மாநாட்டு திடலில் தொண்டர்களை பார்ப்பதற்காக விசேடமாக அமைக்கப்பட்டிருந்த உயர்மட்ட பாதையில் பயணித்து தொண்டர்களை நோக்கி கையசைத்து நன்றி தெரிவித்தார்.

இந்தத் தருணத்தில் தொண்டர்கள் அவரைக் கண்ட உற்சாகத்தில் தோளில் கிடந்த கட்சியின் துண்டை அவர் மீது வீச அதனை அவர் லாவகமாக கையால் பிடித்து தனது தோளில் அணிந்து கொண்டார். உடனே நூற்றுக்கணக்கான ரசிகர்கள் இதனை பின்பற்ற அவற்றில் பல துண்டுகளை தன் கைகளால் எடுத்து தோளில் அணிந்து கொண்டார். அவரது இந்த செயல் தொண்டர்களிடையே உற்சாக வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து மாநாட்டு மேடையில் அலங்கரிக்கப்பட்டிருந்த தமிழகத்தை ஆண்ட மாமன்னர்கள் -சுதந்திரப் போராட்ட தியாகிகள்- தமிழ் மொழிக்காக உயிர்த்திறந்த வீரர்கள் ஆகியோர்களின் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் ராகுகாலம் நாலரை மணிக்கு தொடங்கி விடும் என்பதாலும் அவசரம் அவசரமாக ராகு காலத்திற்கு முன் அக்கட்சியின் கொடியை தலைவரான விஜய் ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஏற்றினார்.

மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த 101 அடி உயர கட்சியின் கொடியை தலைவர் விஜய் ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஏற்ற மெல்ல மெல்ல உயர்ந்து பறந்தது.

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பாடல் மாநாட்டில் வெளியிடப்பட்டது.அதனைத் தொடர்ந்து கட்சியின் கொள்கைகளும், செயல் திட்ட வரைவு அறிக்கையும் வாசிக்கப்பட்டது.

இதில் பல விடயங்கள் அனைவரது கவனத்தையும் கவர்ந்தன. அதிலும் குறிப்பாக

தமிழ் ஆட்சி மொழி - வழக்காடு மொழி - வழிபாட்டு மொழி-

மதுரையில் தலைமை செயலகத்தின் கிளை அமைக்கப்படும்.

ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தல்.

பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு

வைகை நதி நாகரீகம் வெளிக்கொணர முன்னுரிமை

ஆவின் பால் நிறுவனம் கருப்பட்டி பால் விற்பனை

துப்புரவு தொழிலாளிகளுக்கு கைத்தறி ஆடை- அரசு ஊழியர்கள் மாதம் இருமுறை கைத்தறி ஆடை- அணிய பரிந்துரை

மாவட்டம் தோறும் காமராஜர் முன்மாதிரி பள்ளி

தகவல் தொழில்நுட்பத் துறைக்கு தனி பல்கலைக்கழகம்

ஆகியவற்றிற்கு தொண்டர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.இதனைத் தொடர்ந்து கட்சியின் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி. என். ஆனந்த், தலைவர் விஜய்க்கு வீரவாள் ஒன்றை பரிசாக அளித்தார்.

இதனைத் தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகள் தலைவர் விஜய்க்கு இந்திய அரசியல் சாசன புத்தகம் - ஸ்ரீ மத் பகவத் கீதை - திருக்குர்ஆன்- பைபிள் - ஆகியவற்றை பரிசாக வழங்கினர்.

பின்னர் விஜய் பேசத் தொடங்கினார்.

அவரது உரையில், '' நம் கொள்கைகளின் அடையாளமாக மாறியவர் பெரியார். ஆனால் அவர் சொன்ன கடவுள் மறுப்புக் கொள்கையை நாங்கள் கையில் எடுக்கப் போவதில்லை. அதற்கு பதிலாக பேரறிஞர் அண்ணா சொன்ன 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பதுதான் நம் கொள்கை. நேர்மையான நிர்வாகத்தை தந்த காமராஜர் - அரசியல் சாசனத்தை உருவாக்கிய அம்பேத்கர் - வீராங்கனைகள் வேலு நாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகிய ஐவர்கள் தான் நம் கொள்கை தலைவர்கள்.

பிளவுவாத சித்தாந்த அரசியலையும், எளிதில் கண்டறியாத புரையோடி போன ஊழல் மலிந்த கலாச்சாரத்தையும் ஒழிக்க வேண்டும். கரப்ஷன் கபடதாரிகள்- மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று கூறி மக்களை ஏமாற்றி தற்போது ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.

எங்கள் அரசியல் பயணத்தில் முக்கிய பங்கு வகிக்க போவது பெண்கள் தான். மேலும் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதே என் அரசியல் குறிக்கோள்.

பெண்கள் -குழந்தைகள் பாதுகாப்பு - கல்வி -மருத்துவம் - பாதுகாப்பான குடிநீர் - ஆகியவற்றில் கவனம் செலுத்துவது தான் நம் செயல்திட்டங்களில் முக்கியமானது.சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

2026 சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நம்மை தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற வைப்பார்கள்.மக்கள் தங்களுடைய ஒற்றை விரலால் அழுத்தம் வாக்குகள் நம் எதிரிகள் மீது ஜனநாயக ரீதியாக அணுகுண்டாக விழும்.அதே தருணத்தில் நம் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு நம்முடன் வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு வழங்கப்படும். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்'' என்றார்.

மாநாட்டின் சிறப்பம்சங்கள்:

மாநாட்டு திடலில் மேடையில் கட்சியின் தலைவர் பொதுச்செயலாளர் - பொருளாளர் -தலைமை நிலைய செயலாளர்- கட்சி கொள்கை பரப்பு துணைச் செயலாளர் - என ஐந்து இருக்கைகள் மட்டுமே போடப்பட்டிருந்தன.

மாநாட்டிற்கு விஜயின் பெற்றோர்களான எஸ். ஏ. சந்திரசேகர் மற்றும் சோபா சந்திரசேகர் ஆகியோருடன் திரை உலகத்தைச் சார்ந்த நடிகர் ஸ்ரீமன் மற்றும் நடிகர் சௌந்தரராஜா ஆகிய இருவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

அவருடைய பேச்சு ஆக்ரோஷமாகவும் , ஆவேசமாகவும், உணர்ச்சி பெருக்குடனும் இருந்ததாக ரசிகர்கள்- தொண்டர்கள் ஆரவாரத்துடன் தெரிவித்தனர். எம்ஜிஆர் - என்டிஆர் - ஆகியோரையும் மறவாமல் தன் பேச்சில் குறிப்பிட்டார் விஜய்.
Previous Post Next Post


Put your ad code here