தேர்தல்கள் ஆணைக்குழுவின் இ-சேவைக்குள் பிரவேசித்து வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் - தேர்தல்கள் ஆணைக்குழு..!!!


உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இ- சேவை இணையத்தளத்துக்கு பிரவேசித்து வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை இருப்பது கட்டாயமானதல்ல . 2024 தேருநர் இடாப்பில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள செல்லுபடியான அடையாள அட்டையொன்றை வைத்துள்ள வாக்காளர் எவரும் தமக்கு குறித்தொதுக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்களிக்க முடியும்.

பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்கெடுப்பு நாளை மறுதினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை தபால்மூல விநியோகம் இம்மாதம் 07 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் 2024.11.14 திகதிக்குள் தேருநர் இடாப்பில் தாம் பதிவு செய்துள்ள முகவரிக்குரிய பிரதேச தபால் நிலையத்துக்கு சென்று தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தி தமக்குரிய வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

அதேபோல் நிகழ்நிலை முறைமை ஊடாக வாக்காளர் அட்டையின் பிரதியை பெற்றுக்கொள்ளும் வசதியளிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய https://eservices.elections.gov.lk என்ற தேர்தல் இ-சேவை இணையத்தளத்துக்குள் பிரவேசித்து அதிலுள்ள குடிமக்களுக்கு என்ற பகுதியில் இருக்கும் தேருநர் பதிவு விபரம் தேடல் என்ற இ- சேவையினுள் பிரவேசிக்க வேண்டும்.

தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தை உள்ளிட்டு தகவல்களை ஆராய வேண்டும். அதன் துணையுடன் கிடைக்கின்ற தகவல்களில் தேர்தல் நடவடிக்கைகளுக்கான தேருநர் பதிவு விபரம் - பாராளுமன்றத் தேர்தல் 2024 என்பதனுள் பிரவேசித்தல் வேண்டும்.

அப்போது 2024 பாராளுமன்றத் தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் இடாப்பில் தமது தேருநர் இடாப்பு பதிவு தகவல்களை பார்வையிட முடியும்.அதன் பிறகு தமது கையடக்கத் தொலைபேசி இலக்கத்தை உள்ளிட்டு வாக்காளர் அட்டை அச்சிடு என்பதன் மூலம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை பதிவிறக்க முடியும்.

அத்துடன் தமது கையடக்கத் தொலைப்பேசிக்கு குறியீடு (OTP ) ஒன்று கிடைக்கப்பெறும் " Enter the code " என்று தோன்றும் இடத்தில் அக்குறியீட்டை உள்ளிட்டு தமது உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்துக் கொள்ள முடியும்.

வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை இருப்பது அவசியமற்றது. 2024 தேருநர் இடாப்பில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள செல்லுபடியான அடையாள அட்டையொன்றை வைத்துள்ள வாக்காளர் எவரும் தமக்கு குறித்தொதுக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்களிக்க முடியும்.
Previous Post Next Post


Put your ad code here