நுவரெலியா - கம்பளை பிரதான வீதியின் கொத்மலை, கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
கதிர்காமத்திலிருந்து கண்டி - நுவரெலியா பிரதான வீதி ஊடாக குருணாகல் நோக்கி பயணித்த இ.போ.ச பஸ் ஒன்றே இன்று ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை இவ்வாறு வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது. இவ்விபத்தில் பஸ்ஸின் சாரதி உள்ளிட்ட 35 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்து கொத்மலை,கம்பளை, நாவலப்பிட்டிய, மற்றும் நுவரெலியா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இந்த பஸ்ஸில் 60 இற்கும் 70 இற்கும் இடைப்பட்ட பயணிகள் பயணித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ் குடைசாய்ந்து பாரிய பள்ளத்தில் வீழ்ந்தமையால் அதற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி இடம்பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.