யாழ் . மாநகர கழிவகற்றலில் பெரும் ஊழல் மோசடிகள்..!!!


யாழ்ப்பாணம் மாநகரசபையின் திண்மக் கழிவகற்றல் செயற்பாட்டில் பெரும் ஊழல் மோசடிகள் இடம்பெற்று வருவதாக யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகரசபையின் மாதத்துக்கான அமர்வு முதல்வர் மதிவதனி தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது,

அதன் போது, யாழ்ப்பாணம் மாநகரசபையில் 16 உழவியந்திரங்கள் வாடகை அடிப்படையில் கழிவகற்றும் செயற்பாட்டில் ஈடுபடுகின்றன. அவற்றுக்கான மாதாந்த வாடகையாக 50 இலட்சம் ரூபாவும், வருடாந்த வாடகையாக 6 கோடி ரூபாவும் வழங்கப்படுவதாகக் கூறப்பட்டது.

மாநகரசபைக்குச் சொந்தமான வாகனங்கள் சிறிய பழுதுகளுடனேயே இயங்காமல் உள்ளன. எனவே, அந்தப் பழுதைச் சரிசெய்வதை விடுத்து, அதைவிடப் பலமடங்கு தொகையை வாடகைக்காகச் செலவிடுவது யாழ்ப்பாணம் மாநகரசபையின் பணத்தை தேவையற்றுச் செலவழிக்கும் செயற்பாடாக அமைவதுடன், இதில் ஊழல் மோசடிகள் உள்ளதாகவும் சந்தேகப்படுகின்றோம் என்று உறுப்பினர் ப.தர்சானந் தெரிவித்தார்.

அத்துடன் மாநகரசபைக்குச் சொந்தமான சில கழிவகற்றல் வாகனங்கள் குறுகிய இடங்களில் சேவையில் ஈடுபடுகின்ற நிலையில், தொலைதூரச் சேவைக்காக வாடகை வாகனங்கள் செல்கின்றன. இதற்கான காரணங்கள் மோசடிகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று உறுப்பினர் சுவீகரன் நிஷாந்தன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாநகரசபைக்குச் சொந்தமான வாகனங்கள் சில இயங்கு நிலையில் உள்ள போதிலும், அவை உயர் அதிகாரிகள் சிலரின் அழுத்தத்தால் இயங்காமல் செய்யப்பட்டுள்ளன. இந்த விடயம் பாரதூரமானது என்றும் உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

வருடாந்தம் 6 கோடி ரூபாவை வாடகைக்குச் செலவிடுவதைவிட, புதிய வாகனங்களைத் தீர்வையற்ற வரியின் கீழ் கொள்வனவு செய்யமுடியும் என்றும், யாழ்ப்பாணம் மாநகரசபையின் வாகனங்களை கூடுதலான வினைத்திறனுடன் இயங்க வைக்கமுடியும் என்றும் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

இந்த விடயத்தில் இதுவரை இடம்பெற்ற பெரும் ஊழல் மோசடிகள் தொடர்பான தகவல்கள் தம்மிடம் உள்ளன. இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினர் கபிலன் தெரிவித்தார்.
Previous Post Next Post


Put your ad code here