யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சர்வதேச விருதுபெற்ற ஆவணப்பட புகைப்படக் கலைஞர் தர்மபாலன் திலக்சனின் புதிய புகைப்படக் கண்காட்சி "Shadows of the Past” கடந்த 8 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை இல, 50 கண்டி வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கலம் கலாச்சார மையத்தில் நடைபெறுகிறது.
இந்தக் கண்காட்சி இலங்கையின் உள்நாட்டுப் போருக்குப் பிறகு நிலங்கள், வீடுகள், மக்களின் நினைவுகளில் பதிந்த காயங்களையும் அமைதியான நினைவுகளையும் பதிவு செய்கிறது. போரின் நேரடி காட்சிகளுக்கு அப்பால், அதன் நிழல்களில் வாழும் மக்களின் உணர்வுகளையும் மனநிலையையும் திலக்சன் தனது புகைப்படங்களின் வழியே வெளிப்படுத்தியுள்ளார்.
இறந்த காலத்தின் நிழல்கள்
போர் முடிந்ததாகத் தோன்றினாலும், அதன் காயங்கள் ஒருபோதும் முழுமையாக மறைவதற்கான வாய்ப்புகள் இல்லை. அது மண்ணிலும் மனிதர்களின் வாழ்க்கையிலும் ஆழமாகப் பதிந்திருக்கும். சிதைந்த சுவர்கள், குண்டுகள் துளைத்த வீடுகள், வெறிச்சோடிய கிராமங்கள் — இவை அனைத்தும் மௌன சாட்சியங்களாக நிற்கின்றன. அவை ஒரு நிகழ்வு மட்டும் அல்ல, ஒரு காலத் துன்பியலின் சின்னங்கள்; அடையாளங்கள். அவை நிலப்பரப்பையும் நினைவுகளையும் புதிதாக வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன. காலப் போக்கில் இவை அடி ஆழத்திற்குச் சென்றாலும் அவை இன்றளவும் இழந்தவற்றின் பாரத்தைத் தாங்கிக் கொண்டு அவற்றின் கனதியுடனேயே காணப்படுகின்றன.
இத்தகைய காயங்கள் கல், மண்ணில் மட்டுமல்ல. அவை மனிதருக்குள்ளும் உயிரோடு இருக்கின்றன — உடலிலும் உள்ளத்திலும் உயிருள்ள வரை மாறாத, நிலைத்த வலியாகவும் புழுக்களின் தவிக்கும் மனதில் மீண்டும் மீண்டும் எழும் நினைவுகளாகவும் சொல்லாமல் பேசும் கண்களின் ஆழத்தில் மறைந்திருக்கும் வேதனையாகவும். பலருக்கு, போர் முடிந்த நாள் தொடக்கமே; அதன் பின் வரும் நிசப்தங்களிலும், காணாமல் போன அன்பு நிறைந்த உறவுகளின் வெற்றிடத்திலும், தலைமுறைகளைத் தாண்டிப் பரவும் உள்காயங்களிலும் அது தொடர்கிறது. இந்த மறைந்த காயங்களே சில நேரங்களில் வெளிப்படையானவற்றை விட ஆழமானவை — ஏனெனில் அவை ஒருவரை மட்டும் அல்ல, ஒட்டுமொத்த சமூகத்தையும் கலாசாரங்களையும் குறிக்கின்றன.
இக்கண்காட்சி அத்தகைய அக,புற உலகங்களையும் — மண் தாங்கும் காயங்களையும், மனம் தாங்கும் காயங்களையும் — இணைத்து ஆராய்கிறது. புகைப்படங்கள் வழியாக, அமைதி எவ்வாறு வார்த்தைகளை விட சத்தமாக எதிரொலிக்கும், மற்றும் நினைவகம் எவ்வாறு உடையக்கூடியது மற்றும் நீடித்தது என்பதை ஆராய்கிறது. ஒவ்வொரு படமும் ஒரு சாட்சியம்; நினைவுகளிலிருந்து பிரிக்க முடியாதவை - மனிதர்களின் மன வைராக்கியத்தையும் நிலத்தின் பொறுமையையும் இன்னும் நம்மிடையே வாழும் அந்த நிழல்களையும் வெளிப்படுத்தும் பிரத்தியட்ச அழைப்பாகும்.
'இறந்த காலத்தின் நிழல்கள்' என்பது போரைப் பற்றியது மட்டுமல்ல; அவை போருக்குப்பின் நிலைத்திருக்கும் நினைவுகளின் பாரம், நிலத்தின் நினைவாற்றல், வெளித்தெரியாமல் மறைந்து வாழ்வை வடிவமைக்கும் காயங்கள்; மனிதர்கள் தாங்கிக் கொண்டிருக்கும் நிழல்களைப் பற்றியன.