வடக்கு மாகாணத்தில் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் சில பேருந்துகள் மண்ணெண்ணையில் இயங்குகின்றன. அவ்வாறான பேருந்துகள் தொடர்பில் அறியத் தந்தால் அவர்கள் டீசலுக்கு மாறும் வரை அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்வோம் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் வடக்கின் 5 மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர்கள் ஆகியோருக்கும் வடமாகாண ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை என்பது அரச நிறுவனம் என்பது பல பொலிஸாருக்குத் தெரிவதில்லை
அத்துடன் அதிகார சபை சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கின்றபோது அதனால் நடவடிக்கைக்கு உள்ளாக்கும் தரப்பு பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்தால், பொலிஸார் அதிகார சபையையும் விசாரணைக்கு அழைத்து அதிகார சபையை மலினப்படுத்துகின்றனர்.
அத்துடன், வடக்கு மாகாணத்தில் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் சில பேருந்துகள் மண்ணெண்ணையில் இயங்குகின்றன. அதனை நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்குமாறும் ஜனாதிபதி செயலகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொலிஸார் அவ்வாறான பேருந்துகள் தொடர்பில் அறியத் தந்தால் அவர்கள் டீசலுக்கு மாறும் வரை அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்வோம் என தெரிவித்தார்.