எரிபொருள் மற்றும் மின்சாரத்தை மிகச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான விசேட வழிகாட்டல்களை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் திங்கட்கிழமை (23) வெளியிட்டுள்ளார்.
அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண மற்றும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனத் தலைவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டல்களின் முக்கிய விபரங்கள் வருமாறு,
அரச உத்தியோகத்தர்கள் தமது கடமைகளுக்காகத் தனிப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, பொதுப் போக்குவரத்து அல்லது குழுவாக இணைந்து பயணிக்கும் முறையைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வெளிக்களக் கடமைகளுக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க நாளாந்த போக்குவரத்துத் திட்டங்களைத் தயாரிக்குமாறு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மின்சார நுகர்வைக் குறைப்பதற்குக் கடும் நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
அலுவலகங்களில் மின்விளக்குகளுக்குப் பதிலாக இயற்கை வெளிச்சத்தைப் பயன்படுத்துதல்.
குளிரூட்டிகளின் பயன்பாட்டைக் குறைத்து மின்விசிறிகளைப் பயன்படுத்துதல்.
அவசியமற்ற நேரங்களில் மின்தூக்கிகளைத் தவிர்த்து படிக்கட்டுகளைப் பயன்படுத்துதல்.
அவசியமற்ற நேரங்களில் வீதி விளக்குகளை அணைத்தல் மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவம் இல்லாத பகுதிகளில் அவற்றை தற்காலிகமாக செயலிழக்கச் செய்தல்.
தொழில்நுட்ப வசதிகள் உள்ள நிறுவனங்களில், ஊழியர்களை நேரில் அலுவலகத்திற்கு வரவழைப்பதற்குப் பதிலாக வீட்டிலிருந்தே பணியாற்றும் (Remote work) முறையை ஊக்குவிக்குமாறு நிறுவனத் தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்தியாவசியத் தேவைகள் தவிர்ந்த ஏனைய நேரங்களில் வார இறுதி நாட்களிலும் அலுவலகங்களை மூடி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க, இரவு 6:00 மணி முதல் 10:00 மணி வரை மின்சாரத்தை மிகச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய எரிசக்தி பாதுகாப்பு மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு அனைத்து அரச அதிகாரிகளும் பொதுமக்களும் முன்னுதாரணமாகச் செயற்பட வேண்டும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.
