மதுபான சாலைகளுக்கு பூட்டு..!!!


தீபாவளித் திருநாளை முன்னிட்டு நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை வடக்கு மாகாணத்திலுள்ள உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கு ஜனாதிபதியின் பணிப்புக்கு அமைவாக மதுவரித் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

வடக்கு மாகாணத்திலுள்ள இந்து அமைப்புகள் மற்றும் மதத் தலைவர்கள், தீபாவளி தினத்தன்று மாகாணம் முழுவதும் மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

இக்கோரிக்கையைத் தொடர்ந்து, வடக்கு மாகாண ஆளுநர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எழுத்துமூலம் கடிதம் அனுப்பி, தீபாவளியன்று வடக்கு மாகாணத்திலுள்ள மதுபானசாலைகள் மற்றும் மதுபானச் சில்லறை விற்பனை நிலையங்களைத் தற்காலிகமாக மூடுவதற்குத் தேவையான அறிவுறுத்தல்களையும் உத்தரவுகளையும் வழங்குமாறு கோரியிருந்தார்.

ஆளுநரின் கோரிக்கையைத் தொடர்ந்து, ஜனாதிபதியின் பணிப்புக்கு அமைவாக மதுவரித் திணைக்கள ஆணையாளர், வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டச் செயலாளர்களுக்கும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

அதன்படி, சுற்றுலா சபையின் அங்கீகாரம் பெற்ற மற்றும் விசேட நட்சத்திர உணவக உரிமம் பெற்ற நிலையங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களையும் தீபாவளி தினத்தன்று மூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இந்து அமைப்புகள் மற்றும் மதத் தலைவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, தீபாவளி தினத்தில் மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்த ஜனாதிபதி மற்றும் மதுவரித் திணைக்களத்துக்கு ஆளுநர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here